பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 1.59 கூட்டுப் பயிர், இயந்திரத்தால் உழுதல், இவை என்னுடைய நெடுநாளை ஆசை. அவர்கள் எண்ணத்தைக் கேட்டுப் பூரித்தேன். மகிழ்ச்சியிலும் தெளிவை இழக்கவில்லை. இயந்திர இறவை நினைவுக்கு வந்தது. டிராக்டர் வாங்குவதை ஆதரித்தேன். அதை இயக்க வெளியூரிலிருந்து வரும் சம்பளக்காரரை நம்பியிருப்பது ஆபத்து. உள்ளுரில் எத்தனையோ இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களில் இருவருக்காவது இயக்கவும் பழுது பார்க்கவும் கற்றுக் கொடுக்க வேண்டியது இன்றியமையாதது என்று குழந்தைகளுக்குப் பாடஞ் சொல்லுவது போல் விளக்கினேன். ஏழெட்டு வீட்டார் முதல் போட்டு வாங்கும் பொறியைப் பாதுகாக்க, யாராகிலும் ஒருவர், ஆண்டு தோறுமாகிலும் பொறுப்பேற்க வேண்டும். வேலை நேரம், உழுத பரப்பு, எண்ணெய்ச் செலவு, சம்பளம் பிற செலவினங்கள் ஆகியவற்றை நாள்தோறும் முறையாகக் கணக்கு எழுதி, பதில் சொல்லும் பொறுப்பை ஒருவர் ஏற்றுக் கொள்ள வேண்டும். வயதில் முதியவர் இளையவர் என்று பாராமல், பருவத்திற்கு பரும் பங்குதாரர்களைக் கூட்டிவைத்து கணக்கைக் காட்டி ஒப்புதல் பெற மனப்பக்குவம் பெற்றவர்கள் சிலராவது தேவை. இப்படி விவரமாகச் சுட்டிக் காட்டினேன். ஏற்றுக் கொண்டார்கள். இதை இதை இவர் இவர் பார்த்துக் கொள்ளுவார் என்று குறிப்பிட்டார்கள். இளைய தலைமுறை ஆயிற்றே! துப்பாக்கி வயிற்றுப் பீரங்கிகளாக இருக்கட்டுமே! செம்மையாகச் செயல்படமாட்டார்களென்று அவநம்பிக்கை கொள்வானேன்! இப்படி எதிர்பார்த்து டிராக்டர் வாங்கப் பங்குப் பணம் போடும்படி ஒப்புதல் கொடுத்தேன். மகிழ்ச்சியோடு சென்றார்கள். உழும் பொறியை வாங்கினார்கள். பெருமையோடு திரும்பினார்கள். பட்டினத்து ஒட்டியோடு நிறைவு கொண்டார்கள். உள்ளுர்க்காரர் எவரையும் பயிற்றுவிக்கவில்லை. முதல் பருவம் நாலூர்க்காரர்களும் போற்றுமளவு பொறி திறமையாகச் செயல்பட்டது. அடுத்த பருவத்தில் - இரண்டொரு நாள்களில் பழுதேற்பட்டது. பட்டினத்து ஒட்டி, பழுதுபார்ப்பவரைத் தேடிப்போனார். சில நாள்கள் காத்திருந்த பின் அவரைத் தேடி ஊர் விவசாயிகள் போனார்கள்; கிடைக்கவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/201&oldid=786993" இலிருந்து மீள்விக்கப்பட்டது