பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 நினைவு அலைகள் இளமைக்கு இயற்கையாகிய இலட்சியத் துடிப்பு: அரியதை, பெரியதை, பொதுமக்களுக்கு நல்லதைச் செய்ய வேண்டும் என்னும் அவா - அவ்விளைஞர்களை உந்தின; மேலும் மேலும் உந்தின. கள்ளங் கபடமில்லாத வெள்ளை உள்ளம் படைத்த இளைஞர்கள் பலர், தன்னலம் மறந்து, பொதுநலத்தை நினைத்துத் தொண்டாற்ற முன் வந்தார்கள். திங்கள் தோறும் கூடி, நாட்டுத்தொண்டு பற்றித் திட்டம் தீட்டினார்கள். ஆண்டு மாநாடுகள் நடத்தி, நாட்டின் நலிவையும் உயர்வையும் கவனத்திற்குக் கொண்டுவந்தார்கள். பொதுஜன நன்மை' என்னும் பெயரில் அவர்கள் வளர்த்த உணர்வென்ன? விடுதலை உணர்வு. 'ஒவ்வொரு நாடும் தன்னாட்சி பெற வேண்டும் என்னும் உணர்வை வளர்த்தது, வனமலர்ச் சங்கம். இலட்சியப் பிடிப்புள்ள இளைஞர்கள் உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளுக்கு அப்பால் நின்று, இந்திய விடுதலையைக் குறிக்கோளாக ஏற்றுக் கொண்டார்கள். ஏற்றத்தாழ்வை வளர்க்கும் சாதி வேற்றுமை, வனமலர்ச்சங்கத்திற்கு உடன்பாடன்று. 'மக்கள் அனைவரும் சமம்' என்னும் நிலையை உருவாக்கச் சங்கக் காளையர் முயன்றனர். எப்படி உருவாக்குவது? எல்லாரோடும் கலந்து உண்ணல்; கலப்புத் திருமணம் செய்து கொள்ளல்; இவ்வழிகளில் சமத்துவத்தை அடைய அமைதியாகப் பணி புரிந்தது, வனமலர்ச் சங்கம். எல்லாம் தமிழில் உயர்நிலைப் பள்ளிகளிலும் தமக்குரிய இடத்தை முழுமையாகப் பெறாத காலகட்டத்தில், 'சின்னப்பிள்ளைகள் பலர் தமிழ்மொழியைப் பேண முன்வந்தனர்; தமிழிலேயே பேசினர்; தமிழிலேயே கடிதத் தொடர்பு கொண்டனர். தமிழ் மொழி எல்லா நிலைகளிலும் ஆட்சிக்கு வரவேண்டுமென்று பேசினர்; விழைந்தனர். நாட்டுப்புறங்களே இந்தியாவின் நாடி நரம்புகள். அவற்றின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம். விடுமுறை நாள்களில் சிற்றுார்களில் கூட்டம் போட்டுப் பொது அறிவுத் தொண்டு செய்ய முயன்றார்கள், வனமலர்ச் சங்கத்தார். ஆண்டில் பெரும்பகுதி, வேலையின்றிக் குந்திக்கிடப்பவர்கள், நாட்டுப்புற மக்கள். அவர்களுக்கு வேலை கொடுத்து, வாழ்வளிக்க முயன்றது. கதர் இயக்கம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/268&oldid=787071" இலிருந்து மீள்விக்கப்பட்டது