பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 நினைவு அலைகள் சிங்காரவேலர் எங்கே பொது உடைமை முறை உரையாற்றுகிறார். நீதிக்கட்சிக் கூட்டம் எங்கே திரு.வி.க. பேசும் கூட்டம் எங்கே? பாகவதர்கள் காலட்சேபங்கள் எங்கெங்கே? ஈ.வெ.ரா. வின் கூட்டங்கள் எங்கே? இசை மழை எங்கே? இப்படி எந்நிகழ்ச்சி பற்றித் தெரிந்து கொள்ள விரும்பினாலும், நண்பர்கள் என்னைக் கேட்பார்கள். நிகழ்ச்சி நிரல் நாள் காட்டியாக நான் இருந்தேன். பல கூட்டங்களுக்கு நானும் போவேன். அவை, சிலவேளை, எதிரும் புதிருமான கூட்டங்களாகவும் இருக்கக்கூடும். இருப்பினும் கூட்டத்திற்குச் சென்றால், தள்ள முடியாத வேலை இருந்தாலொழிய கடைசிவரை இருந்து கேட்பது என் போக்கு. இதனால் என்னை முற்றுப்புள்ளி' என்று நண்பர்கள் வேடிக்கையாகக் குறிப்பதுண்டு. அக்காலத்தில் ஊமையாக இருந்து கடைசிவரை பேச்சுகளைக் கேட்பது வீண் போகவில்லை. பேச்சுகளின் தரத்தையும் பலனையும் மதிப்பிட அப்போக்கு உதவிற்று. பல பேச்சாளர்கள் வித்தை காட்டி வியக்க வைப்பார்கள். சிலரே கருத்தைச் சொல்லிப் புரிய வைப்பார்கள். இரண்டுங்கெட்டான்களும் உண்டு. என்னை உருவாக்கிய சொற்பொழிவுகள் என்னுடைய கல்லூரிப் பருவத்திலேயே திரு.வி.க., பெரியார் ஈ.வெ.ரா., பட்டுக்கோட்டை அழகிரிசாமி, குத்துரசி குருசாமியார், பூவாளுர் பொன்னம்பலனார் முதலியோரின் பேச்சுகளைக் கேட்கும் வாய்ப்புகள் பெற்றேன். திரு.வி.க.வின் துள்ளுநடை என்னை ஈர்க்கும. அந்நடையைப் பின்பற்ற வேண்டுமென்று விரும்பியதுண்டு. என் எழுத்தில் ஒரளவு அந்நடையின் சாயலைக் காணும் நண்பர்கள் உண்டு. பெரியாரின் பேச்சு என்னை எப்போதும் சொக்க வைக்கும். அதில் வியப்பென்ன? கல்கி கிருஷ்ணமூர்த்தி, வ.ரா. போன்றவர்களையே சொக்க வைத்த பேச்சுகள் ஆயிற்றே. ஆனந்த விகடனில் கல்கி, பெரியாரைப் பற்றி எழுதியதின் சுருக்கம் இதோ. 'சாதாரணமாக இவருடைய பிரசங்கங்கள் மூன்று மணி நேரத்திற்குக் குறைவது கிடையாது. எவ்வளவுதான் நீட்டினாலும் இவருடைய பேச்சில் அலுப்புத் தோன்றுவது கிடையாது. அவ்வளவு ஏன்? தமிழ் நாட்டில் ராமசாமியாரின் பிரசங்கம் ஒன்றை மட்டுந்தான் என்னால் மூன்று மணி நேரம் உட்கார்ந்து கேட்க முடியும் என்று தயங்காமல் கூறுவேன்.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/288&oldid=787098" இலிருந்து மீள்விக்கப்பட்டது