பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 நினைவு அலைகள் திரு. தணிகைவேலோடு தொடர்பு கொண்டேன். அன்றே ஊருக்குத் திரும்ப விரும்புவதாகக் கூறினேன். காரணத்தைச் சொல்லவில்லை. எப்படியும் அன்றைய சென்னை இரயிலில் இடம்பிடித்துத் தர வேண்டினேன். அப்படியே செய்தார். பத்து நாள்கள் தங்குவதற்குப் பதில் நான்கு நாள்களோடு என்னுடைய உதகைப் பயணம் முடிந்துவிட்டது. அரக்கோணத்தில் இரயில் மாறி, வாலாஜாபாத் வந்தடைந்தேன். அங்கிருந்து நெய்யாடு பாக்கத்திற்கு வாடகை ஒற்றை மாட்டுவண்டியை ஏற்பாடு செய்துகொண்டேன். மேடும் பள்ளமும் கடந்து, ஊர் போய்ச் சேர இரண்டு மணிகள் ஆயின. என் கனவும் அதன் முடிவும் நான், திடீரெனத் திரும்பிவிட்டதைப் பற்றி எல்லோரும் கலவரப்பட்டார்கள். உதகைக் குளிர் பிடிக்கவில்லை என்று அமைதியாகக் கூறிவிட்டேன். என் தந்தையிடம் மட்டும் தனியாக உண்மையைக் கூறினேன். அது என்ன? என் தாயாரைப் பெற்ற பாட்டி இறந்துவிட்டார்கள் என்று கனவில் சேதி கேட்டுத் திடுக்கிட்டேன். அப்புறம் உதகையில் இருப்புக் கொள்ளவில்லை. எனவே, விரைவில் திரும்பிவிட்டேன் என்று தந்தையிடம் கூறினேன். நான் வீணாகக் கவலைப்பட்டேன் என்பது என் தந்தையின் முடிவு. ஏன்? என் பாட்டிக்கு எவ்விதக் குறிப்பிட்ட நோயும் இல்லை; நான் வெளியூர் சென்றிருந்த பத்து நாள்களில், பாட்டியின் உடல்நலத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. கெட்ட கனவை மறந்துவிடவும் வேறு யாரிடமும் பேச்சு மூச்சு விட வேண்டாம் என்றும் தந்தை கட்டளையிட்டார். அப்படியே இருந்தேன். கவலையை மறந்தும் இருந்தேன். ஆனால், நாலைந்து நாள்களுக்குப் பிறகு, என் அருமைப் பாட்டியார், நொடியில் கண் மூடிவிட்டார்கள். நான் அஞ்சியது நடந்துவிட்டது. என் செய்ய? நான் அந்தப் பாட்டிக்கு மிகவும் வேண்டியவன்; ஆகவே எனக்கு அதிர்ச்சி அதிகம். காலம் நகர்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/386&oldid=787232" இலிருந்து மீள்விக்கப்பட்டது