பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364 நினைவு அலைகள் - ஏற்கெனவே செய்திருந்த ஏற்பாடு பலித்தது. அதன்படி, விக்டோரியா விடுதிக் காப்பாளர் பேராசிரியர் பிராங்கோவைக் கண்டு அவரிடம் மனுக் கொடுத்தேன். ஏழெட்டுத் திங்களுக்கு முன், நான் பல நாள்கள் காய்ச்சலால் அவதிப்பட்டதால் உடல் வலுவை இழந்து இருக்கிறேன். திரும்பிப் பழைய நிலைக்கு வர நாளாகும். அந்நிலையில் நாள்தோறும் நான்கு கிலோமீட்டர் போல் நடந்து அலுத்துவிட்டால் பல்கலைக்கழகத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற இயலாது. சிறப்புப் பாடத்தை எடுத்துக் கொண்டு, குறைந்த மதிப்பெண் பெறுவது தோல்வியைவிடத் தீங்கானது. அது எனக்கு எதிர்காலம் முழுவதும் தொடரும் தொல்லையாகிவிடும். ஆகவே, எனக்கு விதிவிலக்கு அளித்து, மீண்டும் என்னை விக்டோரியா விடுதியில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இக்கோரிக்கையை ஏற்றுக் கொண்டார், பேராசிரியர் பிராங்கோ. அவர் சென்னை மாநிலக் கல்லூரியில் எனக்கு அரசியல் கற்றுக் கொடுத்தவர். நல்ல பெயர் உடையவர். பொதுக் கல்வி இயக்குநர் அலுவலகத்தின் சீனியர் மேற்பார்வையா ளரின் பரிந்துரையை அவரால் தட்ட முடியவில்லை. அக்கால அலுவலகங்களில் எவர் வைத்தது சட்டம் என்பதற்கு இது அடையாளம். இந்நிலை எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. இதனால் நான் நன்மை அடைந்தேன். இருப்பினும் தலைகீழ்ச் செல்வாக்கு உடைய இந்நிலையை இன்றும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நம் சமுதாயத்தில் உள்ள சாதி ஏற்றத்தாழ்வு முறையால் எனக்கு அதிகத் தொல்லை இல்லை. ஒரளவு எனக்கு நன்மையானதே. எப்படி? பிறவியில் என்னைவிடப் பெரிய சாதி என்று உரிமை கொண்டாடக் கூடியது ஒரே சாதிதான். அது பார்ப்பன சாதியே. பழக்கக் கொடுமையால் என்னிலும் தாழ்ந்தவர்கள் என்பதை மறுத்துப் போராடாதவர்கள், நூற்றுக்குத் தொண்ணுறு பேர்களுக்குமேல். மனத்தால் பலரைக் குறைவாக மதிப்பிடும் வாய்ப்பிருந்தும், நான் சாதியை உடைக்கும் பணியில் முனைப்பாயிருந்து பலருக்கு வேண்டப் படாதவனாகிறேன். பெரியார் என்னும் பகுத்தறிவுச் சுடரின் கதிரியக்கம் என் குருதியின் கலப்பையே மாற்றிவிட்டது. அதேபோல், அதிகாரிகளே ஆணையிடும் உரிமையும் பொறுப்பும் உடையவர்களாக இருக்கவேண்டும். அவர்களிடம் பணிபுரியும் அலுவலர்களின் தயவில் மற்ற அதிகாரிகளும் அலுவலர்களும் வாழும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/406&oldid=787273" இலிருந்து மீள்விக்கப்பட்டது