பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/464

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 421 முப்பத்தைந்தில் காலந்தள்ள வேண்டும்' என்னும் சோகம் மின்னிற்று அதை வெளிக்குக் காட்டவில்லை. வழக்கம் போல ஆர்வத்தோடு பணி புரிந்தேன். நீண்ட ஆங்கிலப் பேச்சுகளையும் கட்டுரைகளையும் மொழி பெயர்ப்பதில் மகிழ்ச்சி கொண்டேன். விளங்காத மொழிபெயர்ப் பென்று எவரும் குற்றம்சாட்டாமல், நாள்கள் ஓடின. உடன் இருப்போரும் அன்பாகப் பழகினர். இப்படி வேலை செய்து கொண்டிருக்கையில், ஆரிய சமாஜத்தை நிறுவிய சாமி தயானந்த சரசுவதி அவர்களின் நினைவு நாள், சீனா கடைத்தெருவில் கொண்டாடப்பட்டது டாக்டர் வரதராசுலு தலைமையில் டாக்டர் சுப்பராயன் உரையாற்றினார். அக்கூட்டத்திற்கு நான் சென்றேன். தமிழ் நாடு’ நாளிதழின் சார்பில் எவரும் அங்கு வரவில்லை என்பது புலனாயிற்று. எனவே, பேச்சுகளை, உன்னிப்பாகக் கவனித்தேன். சில சொற்களைக் குறித்துக் கொண்டேன். இரவு நான் தங்கியிருந்த அறைக்குத் திரும்பியதும் அந்நிகழ்ச்சியையும் உரைகளையும் சற்று விரிவாக எழுதினேன். அடுத்த நாள் காலை, அலுவலகத்தில் அதைச் சேர்த்தேன். அதை அப்படியே வெளியிட்டார்கள், என் மகிழ்ச்சியைப் பற்றிக் கேட்பானேன்! பெரியாரின் அழைப்பு சில வாரங்கள் ஓடின. தந்தை பெரியார் ஈ.வெ.ரா.வின் சார்பில் குத்துசி குருசாமி பி.ஏ. என்னைக் காண்பதற்கு வந்தார். வால்டேர், இங்கர்சால், ரஸ்ஸல் போன்ற மேனாட்டு அறிஞர்களின் நூல்களைத் தமிழில் வெளியிடப் பெரியார் விரும்புவதாகவும் அதற்குத் தக்க ஆளைத் தேடிக் கொண்டிருப்பதாகவும் கூறினார். எனக்கு உடன்பாடானால், மாதம் ஐம்பது ரூபாய் சம்பளத்தில் பெரியார் இடம் வந்துவிடலாம். ஈரோட்டில் செலவும் குறைவு. டாக்டர் வரதராசுலுவிடம் அய்யாவே பேசி, உடனே உங்களை விடுவிக்க ஏற்பாடு செய்துவிடுவார். நல்ல எழுத்துப் பணியாக இருக்கும் என்று திரு. குருசாமி என்னிடம் கூறினார். என் பதில் என்ன? நான் இராமசாமிப் பெரியாரை என் தலைவராகவும், குருவாகவும், வழிகாட்டியாகவும் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். தலைவர்- தொண்டர் என்கிற அந்த நல்ல உறவை முதலாளி - அலுவலன் என்கிற உறவு பாழாக்கிவிடும். எனவே அய்யாவின் விருப்பப்படி அவரிடம் வேலைக்கு வரமுடியாமைக்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகக் கூறுங்கள். இதுவே என் பதில்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/464&oldid=787365" இலிருந்து மீள்விக்கப்பட்டது