பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/559

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

516 நினைவு அலைகள் பிறர் மாற்றுக் கருத்தைப் பொறுத்துக் கொள்வதே நாகரிகத்தின் தொடக்கம். அதை நிறையப் பெற்றிருந்த தமிழ்ப் பொது மக்கள், விரைந்து அந்தப் பண்பாட்டைக் கைவிட்டு வருகிறார்கள் என்பது என் மதிப்பீடு. இப்போக்கு, வெறித்தனத்தை வளர்த்து, மீண்டும் நம்மை விலங்கு நிலைக்குத் தள்ளிவிடும். அறிவாளிகளே கருத்துரிமைக்குப் பாடுபட முன்நிற்க வேண்டும். ஆனால் நம் பொல்லாத வாய்ப்பாக, இக்கால அறிவாளிகள், நொய்க்கஞ்சிகளாகயிருப்பதே சிறப்பு என்று ஏமாறுகிறார்கள். அரசியல் தலைவர்களுக்கோ, தேர்தல் வெற்றியொன்றே குறிக்கோள். ஆகவே ஒழுங்கை வளர்ப்பதற்குப்பதில் ஒழுங்கீனத்தை, காழ்ப்புணர்ச்சியை வளர்ப்பது அவர்களுடைய மலிவான நடவடிக்கை. பொது மக்களுக்கு நன்னெறி காட்டுவோர் எவர்? பொறையுடை மையை வளர்ப்போர் எவர்? காங்கிரசுத் தொண்டர் எதிர்பார்த்தபடி, அடுத்து வந்த சில திங்களில் கருத்து மழை பெய்தது. இந்தி கட்டாயப் பாடம் வேண்டாம்; பாடச் சுமையை அதிக மாக்கும்; நாட்டுப்புற மக்களின் கல்வி வளர்ச்சியை நசுக்கும்; ஒடுக்கும். இது சாதாரண மக்களுடைய கருத்தோட்டம். அரசியல் கட்சிகளின் கருத்து தமிழ் நாட்டு அரசியல் கட்சிக்காரர்களின் அணுகு முறை என்ன? காங்கிரசுக்காரர்கள், கட்சிக் கட்டுப்பாடு, இந்திய ஒருமைப் பாட்டுக்குத் துணை; இந்தியைப் பரப்புதல் காந்தியாரின் ஆக்கத் திட்டங்களில் ஒன்று; பல்லாண்டுகளாகப் பரப்பி வரும் மொழி, ' என்றெல்லாம் கூறி, கட்டாய இந்திப் பாடத்தை ஆதரித்தார்கள். மாற்றுக் கட்சி அரசியல்வாதிகள், அதை 'மொழியாதிக்கம், தமிழைத் தாழ்த்தும் முயற்சி, தமிழர் படிப்பில் மண்ணள்ளிப் போடும் வேலை என்று கூறிக் கட்டாய இந்தியை எதிர்த்தார்கள். சாதி சமய வேறுபாடின்றிப் பல்வேறு பிரிவினரும் எதிர்த்தார்கள். காஞ்சி பரவஸ்து இராசகோபாலாச்சாரியார் வன்மையாக எதிர்த்தார். தமிழாசிரியர்கள் எதிர்த்தார்கள். ஆங்கில மொழி ஆதிக்கத்திலிருந்து விடுபடாத தமிழர், இந்தி ஆதிக்கம் என்னும் மற்றோர் கால்கட்டைப் போட்டுக் கொண்டால், சப்பாணி ஆகிவிடுவார்கள். அவர்கள் படிப்புக் கெடும்; அவர்கள் கையாளும் தமிழ் உருமாறும் என்று பரவலாக எதிர்த்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/559&oldid=787501" இலிருந்து மீள்விக்கப்பட்டது