பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/690

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 647 'அய்யா உத்தரவு கொடுத்தபடி ஏற்பாடு செய்துவிட்டு வந்து தகவல் கொடுக்கிறேன். அய்யா எப்போது வரமுடியுமென்று, இரண்டொரு நாள்களைக் குறிப்பிடுங்கள். அந்நாள்களை அவர்கள் இடம் கூறி அழைக்கிறேன்' என்றார் தலைமை ஆசிரியர். 'விழாநாளை விருந்தினர்களே முடிவு செய்யட்டும். அவர்கள் வரும் நாளில் நாங்களும் வந்து விடுகிறோம். ஆனால் பெரிய ஆய்வாளருக்கு முன்னதாகத் தெரிவித்து அழைக்க வேண்டும்' என்று முத்துசவரிக்குச் சொல்லியனுப்பினேன். முத்துசவரி, திருவாளர்கள் கல்யாணசுந்தரம், சுயம்பிரகாசம் வேதாசலம் ஆகியோரிடம் விழாவுக்கான நாளும் இசைவும் பெற்று வந்தார். மேலப்புனவாசல் நலப்பள்ளியின் ஆண்டு விழாவும் பெற்றோர் சங்கக் கூட்டமும் சிறப்பாக நடந்தன. எதிர்பார்த்ததைவிட நல்ல கூட்டம். மேலப்புனல்வாசல், திருவையாறுக்கு வடமேற்கே சில கல்தொலைவில் இருக்கிறது. திரு சுயம்பிரகாசம் எங்களைக் காரில் அழைத்துக் கொண்டு போனார். ஊர்க்கோடியில் தாரை தப்பட்டைகளோடு, மக்கள் குழுமியிருந்தார்கள். அந்தப் பண்டைய இசைகள் முழங்க, நாங்கள் ஊர்வலமாக அழைத்துக்கொண்டு போகப்பட்டோம். தேர்தல் காலங்களில், வாக்குச் சீட்டுகளை நாடிச் செல்வோர் கூட, அக்காலத்தில் ஆதிதிராவிடக் குடியிருப்பிற்குள் சென்று சிறிது நேரம் தங்குவது அரிது. ஆனால் நாங்களோ குடியிருப்பில் மூன்று மணி நேரத்துக்குமேல் தங்கி இருந்தோம். அங்குள்ளோரை எட்டி நிற்க விடவில்லை. சூழ்ந்து உட்கார, நெருங்கி உட்காரச் செய்தோம். நாங்களும் விலகி, மடி'யாக உட்காரவோ, நடக்கவோ இல்லை. ஊர்வலத்தில் வந்த சிறுவர்களை உற்சாகமாகத் தட்டிக்கொடுத்ததும் உண்டு. இத்தகைய 'அக்கிரமத்தை சாதாரண மனிதர்கள் கூட்டத்தில் செய்திருக்க முடியாது. செய்திருந்தால் அவர்களுக்கு அடிஉதை கிடைப்பதைவிட, குடியிருப்பைச் சேர்ந்தவர்களுக்கே அதிகத் தண்டனை கிடைத்திருக்கும். கரந்தை, தமிழ்ச் சங்கத்தின் உயிராக விளங்கிய உமாமகேசுவரன் பிள்ளையோ அவரோடு உறவுடைய - தோழமை உடையவர்களோ செய்தால், மற்றவர்கள் முணுமுணுக்க மட்டுமே முடியும்; அதைத் தடுக்க முடியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/690&oldid=787672" இலிருந்து மீள்விக்கப்பட்டது