பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/767

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

726 நினைவு அலைகள் பேட்டிக்கு முன்னரே, எனக்கு ஒன்று வெளிச்சமாயிற்று. அது என்ன? படிப்புத் தகுதியில் என்னைவிடத் தரமானவர்கள் எவரும் பேட்டிக்கு வரவில்லை; ஆனால் இரண்டொரு ஆண்டுகளாவது, கல்லூரிகளில் விரிவுரையாளர்களாக இருந்தோர் அய்ந்தாறு பேர்களுக்குமேல் இருப்பது புரிந்தது. அந்நிலையில், விரிவுரையாளர் பதவி எனக்குக் கிடைப்பது அரிது, என்றும் தெளிவாகத் தோன்றிற்று. எனினும் நான் மனந் தளரவில்லை. இப்போது பெறும் பேட்டிப் பழக்கம் பின்னர் வரும் பேட்டிகளுக்கு ஒத்திகையாகப் பயன்படலாம் என்னும் எண்ணத்தில் மகிழ்ச்சியோடு பேட்டிக்குச் சென்றேன். 111. மாவட்டக் கல்வி அலுவலருக்கான பேட்டி விரிவுரையாளர் பதவிக்கு என்னைத் தேர்ந்தெடுக்கவில்லை. நான் அதைவிடப் பெரியது ஒன்றை நினைத்துக் கொண்டிருந்தேன். எனவே அதிர்ச்சியடையவில்லை. நாள்கள் சில கழிந்தன. ஜப்பானியக் கப்பல் ஒன்று இந்தியாவை நெருங்கிற்று: வங்கக்கடலில் இருந்தபடி, அந்த நாள் சென்னை மாகாணத்தின் வடபகுதியில் இருந்த காகினாடா என்ற துறைமுகப்பட்டினத்தின்மேல் குண்டு வீசியது. - அச்செய்தியைக் கேட்ட, சென்னை மாநகர மக்கள் பதைத்தார்கள். அடுத்து, சென்னையின் மேல் பகைவர் குண்டு விழுமென்று அஞ்சினார்கள். அச்சம் கெளவிய அப்போது, விமானத் தாக்குதல் பாதுகாப்பு அணியைச் சேர்ந்தோர், அணியுடையில் மட்டுமே எப்போதும் வெளியே செல்ல வேண்டும் என்று அரசு அறிவித்தது. எப்போதும் ஆயத்த நிலையில் இருக்கும்படி ஆணைஇட்டது. அப்படி அரசு அறிவித்த அன்றே, மாவட்டக்கல்வி அலுவலருக்கான நேர்காணல் பேட்டி நடந்தது. வெடிகுண்டை எதிர்பார்த்த நிலையில், இரும்புத் தொப்பியோடும் அரைக்கால் சட்டையோடும் பாதுகாப்பு அணி உடையில் பேட்டிக்குச் சென்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/767&oldid=787770" இலிருந்து மீள்விக்கப்பட்டது