பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 நினைவு அலைகள் அன்பு பொழியும் முழு நிலவு நான் படித்தபோது, ஆண்டர்சன் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களாகப் பணிபுரிந்தவர்கள், பல சமயத்தினர்; பல சாதியினர். யாரால் நடத்தப்படுகிறதோ, அந்தப் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கே வேலை என்னும் குறுகிய பார்வையை அன்றையப் பள்ளி நிர்வாகி களிடமும் மற்றவர்களிடமும் காணவில்லை. கையில் சிக்கிய பொது அமைப்பில் தன் சமயத்தவரை, தன் சாதியினரைக் கொண்டு நிரப்ப நோன்பிருக்கும் கிறுத்துவர்களை என் இளமைப் பருவத்தில் நான் கண்டதில்லை. எல்லோரையும் ஏற்று எல்லோரையும் வாழ வைத்த என் உயர்நிலைப்பள்ளியைப் பற்றி எனக்கு முழுநிறைவு. எந்த ஆசிரியர் இடத்திலும் வேறொருவர் இருக்கக் கூடாதா என்று எண்ண நேர்ந்ததில்லை. ஆசிரியர்களுக்குத் திறமை வேண்டும். அதே நேரத்தில் அன்பு பொழியும் முழு நிலவுகளாக அவர்கள் விளங்க வேண்டும். சமதை நோக்கும் இன்றியமையாதது. மாணவர்கள் அனைவரிடமும் சாதி மதங்களைப் பாராமல், அன்போடும் இனிமையோடும் பழகும் மிக உயர்ந்த பண்பும் வேண்டும். இவை என்னுடைய பள்ளி ஆசிரியர்களிடம் நிரம்பி இருந்தன. இன்னா செய்தவர்க்கும் இனியவே செய்தவர் பண்புச் சுடர்களாகிய என் ஆசிரியர்களை வழி நடத்தியவர் ஒப்பற்ற சான்றோர். அவர், அருள்திரு மெக்லீன், ஏசுநாதரின் அறவுரைகளை மக்களிடையே பரப்ப வந்த சமயகுருவாகவே பலரும் அவரை அறிவர். ஏசுநாதரின் அருள் உரைகளைத் தம் வாழ்க்கையில் கடைப்பிடித்து ஒழுகிய சீலராகவே அவரை நான் அறிந்து கொள்ளும் வாய்ப்பு எப்போது, எங்குக் கிட்டிற்று? பள்ளியிலா? வெளியிலா? பள்ளியில் அல்ல; பள்ளிக்கு அப்பால் உள்ள பரந்த உலகத்தில். கோயில்கள் நிறைந்த காஞ்சிபுரத்தில் திருவிழாக்களுக்குக் குறைவில்லை என்பதை முன்னரே குறித்துள்ளேன். திருவிழா நாள்களில் சான்றோர் மெக்லீன், நாற்சந்திகளில் நின்று கம்பீரமாகக் கிறுத்துவப் பிரசாரம் செய்வார். நல்ல தமிழில் பேசுவார். "ஏன் பிறந்தார் ஏசுநாதர் என்ன போதித்தார் ஏசுநாதர்? கர்த்தரின் கட்டளைகள் எத்தகைய மாண்புடையன இவற்றை விளக்குவார் மக்கள் மொழியில், மக்கள் நிலைக்குப் பேசுவார். அவர் பேச்சில் பிற சமயப் பழிப்பு சேராது; கிறுத்துவின் நன் மொழிகளை நினைவுபடுத்துவார் விளக்கவுரை ஆற்றுவார். வாழ்விக்க வந்தவரைச்சிலுவையில் அறைந்து கொன்று மகிழ்ந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/98&oldid=787805" இலிருந்து மீள்விக்கப்பட்டது