பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 நினைவு அலைகள்

அதனால் ஆண்டொன்றுக்கு இருபது இருபத்தைந்து ஆயிரம் ரூபாய்கள் வரை வருவாய் கிடைத்தது.

திரு. இரத்தினசாமி, தலைவரானதும் கண்காட்சி வரும்படியைக் கல்விச் சீர் அமைப்பிற்காகவே, ஒதுக்கி வைக்கலாம் என்று ஆலோசனை கூறினார்.

நகர் மன்றம் அதை ஏற்றுக்கொண்டது. அந்நிலையில் நான் அவ்வூருக்குப் போய்ச் சேர்ந்தேன்.

சேலம் கல்லூரி முதல் தரம் ஆனது

ஒரு நாள் மாலை நகர் மன்றத்தலைவர், கல்லூரி முதல்வர், நான் ஆகிய மூவரும் தற்செயலாகக் கூடினோம்.

உரையாடலின்போது தலைவர், முதல்வரைப் பார்த்து, ‘உங்களுக்கு, சென்னைப் பச்சையப்பன் கல்லூரி முதல்வர் பதவியைப் பெற்றுத்தர, சில நண்பர்கள் முயல்வதாகக் கேள்வி. அது எவ்வளவுக்கு உண்மை? ஏன் இங்கிருந்து வேறு கல்லூரிக்குச் செல்ல முயல்கிறீர்கள்’ என்று கேட்டார்.

இந்தச் செய்தி எனக்குத் தெரியாது. இருப்பினும் முந்திரிக் கொட்டைபோல் நான் முந்திக்கொண்டேன்.

‘பதினேழு ஆண்டுகள் பணி புரிந்த பிறகு, முதல்நிலைக் கல்லூரி முதல்வராக விரும்புவது இயற்கை.

‘எவ்வளவு காலம் இரண்டாம் நிலைக் கல்லூரியில் தேங்கிக் கிடப்பார்?’ என்று நான் பதில் கூறினேன்.

‘அப்படியானால், நம் கல்லூரியையே முதல் நிலைக் கல்லூரியாக உயர்த்திவிட்டால் போகிறது; அதற்கு என்னென்ன செய்ய வேண்டும். சொல்லுங்கள்; செய்து முடிப்போம்’ என்று திரு. இரத்தினசாமி கூறினார். -

‘அப்படியா?’ என்று முதல்வர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மீண்டும் குறுக்கிட்டேன்.

‘முதல்வர் அய்யாவுக்கு என்னென்ன செய்யவேண்டும் என்பது தெரிந்திருக்கலாம். இருப்பினும் சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர், டாக்டர் ஆர்க்காடு இலட்சுமணசுவாமி முதலியாரைப் பார்த்து, நேரில் கேட்டுத் தெரிந்து கொள்வது மிகவும் நல்லது.

‘அவர், இது இது தேவையென்று சொல்லிவிட்டால் அப்புற. அவருடைய சகாக்கள் கட்டை போட முடியாது அல்லவா? என்றேன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/138&oldid=623030" இலிருந்து மீள்விக்கப்பட்டது