பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

C) நினைவு அலைகள்

அதேபோல், முதியோர் எழுத்தறிவு மையங்களை விட்டுவைத்தால் சில ஆண்டுகள் பொறுத்தாகிலும் அவை வளரும், பலன் கிடைக்கும் என்று கூறி, இரவுப் பள்ளிகள் தொடர்ந்து நடக்கச் செய்தேன்.

இவ்வேளை, ஒரு பொது நிகழ்ச்சி நினைவிற்கு வருகிறது.

சென்னை புரசைப்பாக்கம் பகுதியில் சமூகத்தொண்டு செய்து வந்த நிறுவனம் ஒன்று தன் ஆண்டு விழாவை ஒழுங்காக நடத்தி வந்தது.

அமைச்சர் டி. எஸ். எஸ். இராஜனின் பெருந்தன்மை

ஒர் ஆண்டு விழாவில், அப்போதைய அமைச்சர் மாண்புமிகு டாக்டர். டி.எஸ்.எஸ். இராஜன், மாநகராட்சி துணை ஆணையர் திரு. சங்கரன் ஆகியோரோடு நானும் கலந்து கொண்டேன்.

விழா, புரசை சர் எம்.சி.டி.எம். உயர்நிலைப் பள்ளி மண்டபத்தில் நடந்தது.

டாக்டர் இராஜன் தமது உரையில், “முதியோர் கல்வி எதிர் நீச்சல் முயற்சியாகும். அது அவ்வளவு தேவையல்ல. அதனால், மொட்டைக் கடிதங்கள் அதிகமாகும் பலன்தான் ஏற்படும்’ என்று பொருள்படப் பேசினார்.

என் முறை பிறகு வந்தது. அமைச்சரின் கருத்தைத் தொடாமலே பேசியிருந்தால் தவறாகி இராது. ஆனால் என் இயல்பு வெளிப்பட்டது.

‘அமைச்சரோடு கருத்து மாறுபடுகிறோம். அதை ஊரறியச் சொல்வது உலகியல் அல்ல’ என்று நழுவியிருக்கலாம். அப்படிச் செய்யாமல், அந்த மேடையில் பதில் சொல்லிவிட்டேன்.

‘தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும். எழுத்தறியாதவர்கள் படும்பாட்டை, அவர்களைத் தாக்கும் இழிவை, நம்மைப்போன்று, ‘படித்தவர்கள் உணர்வது அரிது. இளமைப் பருவத்தில் சொல்லிக் கொடுக்கத் தவறியதற்குக் கழுவாய் வேண்டும். ‘எவ்வளவு செலவானாலும் முதியோர்க்கு எழுத்து அறிவைக் கொடுக்க வேண்டும். அது, அவர்களுடைய பிறப்பு உரிமை.

‘எழுதப் படிக்கக் கற்றவர்கள் மொட்டைக் கடிதம் எழுதுவதைக் கண்டு அஞ்சி, எழுத்தறிவிப்பு முயற்சியைக் கைவிடக் கூடாது.

‘நீண்ட காய்ச்சலுக்குப் பின் பெய்யும் மழை சிறிதாயின் புழுக்கம் மேலும் அதிகமாகி, தொல்லைப்படுத்தும்; முதல் தூறலின் விளைவு அது. அடுத்துப் பெருமழை பெய்து விட்டால், நிலம் குளிர்ந்து விடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/306&oldid=623224" இலிருந்து மீள்விக்கப்பட்டது