பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 நினைவு அலைகள்

அப்போதுதான், ஆண்டு முழுவதற்கும் சேரவேண்டிய உதவி நிதியைக் கணக்கிட்டு வழங்க முடியும்.

பன்னிரண்டு திங்களில் செய்யவேண்டிய, தொள்ளாயிரத்துக்கு, மேற்பட்ட, அறிக்கை மதிப்பீடுகளை இரு திங்களில் செய்யவேண்டிய நெருக்கடியில் நான் சிக்கிக்கொண்டேன்.

அதோடு அன்றாட அலுவல்களை நடத்தவேண்டும். மேலும் கல்வி அலுவலரின் நேரடிப் பொறுப்பான, உயர் நிலைப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் ஆசிரியப் பயிற்சி பள்ளி ஆகியவற்றை ஆண்டுக்கு ஒரு முறை தணிக்கை செய்யும் வேலையைச் சரிவரச் செய்வதோடு, போர் ஆதரவு பேச்சுகளில் ஈடுபடவேண்டும்.

போர் ஆதரவுக்காக, தொடக்கப் பள்ளி ஆசிரிய மையங்களுக்கும் சென்று பேச வேண்டும்; மாணவர்களிடம் உரை ஆற்ற வேண்டும்: பொதுக்கூட்டங்கள் கூட்டி உரை நிகழ்த்த வேண்டும். இவ்வளவு பணிகளிலும் முழுமூச்சுடன் ஈடுபட்டேன்.

பகல் முழுவதும் வேலை

விடியற் காலை அய்ந்து மணிக்கு எழுந்து, தொடக்கப் பள்ளி தணிக்கை அறிக்கைகளை மதிப்பிடுவேன். இது இரண்டு மணி நேரம் நடக்கும். மீண்டும் இரவு அவ் வேலையில் மூழ்குவேன்.

காலை ஏழு மணிக்குக் காலைக் கடன்களை முடிப்பேன்; குளிப்பேன்; அதற்குள் தயாராகியுள்ள சிற்றுண்டி உண்பேன்.

அருகில் இருந்த அலுவலகத்திற்கு ஒன்பது மணிக்கே, சென்று விடுவேன். அன்றாட அஞ்சல்களைப் பார்த்து, அப்போதைக்கப்போதே முடிவு எடுப்பேன்.

எவர் குறிப்பு எழுதினாலும் சுட்டிக் காட்டும் விதிகளை நானே படித்துப் பார்த்த பிறகு முடிவு செய்வேன்.

எவ்வளவு நம்பிக்கைக்குரியவராயிருந்தாலும் வாய்வழி ஆதாரங்களை ஏற்பது இல்லை என்பதில் உறுதியாக இருந்தேன்.

நடுப்பகல், வீட்டிற்கு வந்து உணவு அருந்திவிட்டுச் செல்வேன். இந்த அரைமணி, ஒரு மணி, அலுவல் அறையை விட்டுப் போனது. கால் ஆரவும் வேலைத் தேய்விலிருந்து விடுபடவும் உதவிற்று.

சீகாகுளம் மாவட்டக் கல்வி அலுவலகத்தில், கடைநிலை ஊழியர். காவலர், தோட்டக்காரர் தவிர ஏனையோர் தெலுங்குப் பார்ப்பனர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/70&oldid=623441" இலிருந்து மீள்விக்கப்பட்டது