பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 O டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா தாயின் வயிற்றிலிருந்து தரையிறங்கி வந்து, தனித்துக்கிடக்கிறபோது, ஆவென்று வாயைப்பிளந்து, அலறி, பிராணவாயுவை உள்ளிழுக்கத் தொடங்கு கிறோமோ அந்த நொடியிலிருந்தே ஆரம்பமாகிவிடுகிறது நமது அற்புதம் நிறைந்த அதிசயமான வாழ்க்கை. உள்ளேபோகும் உயிர்க் காற்று, உடலை இயக்க ஆரம்பித்து, வளர்க்கத் தொடங்குகின்றபோது, வளர்ச்சியும், மலர்ச்சியும், எழுச்சியும் கிளர்ச்சியும்பெற்று, உணர்ச்சி பூர்வமாக உடலும் வளர்ந்து, வாழ்க்கையை வளர்த்து உற்சாகப்படுத்துகின்றது. இந்தப் பணி அயராமல் தொடர்கின்றது. வாழ்நாள் முழுவதும் வலுவடைந்து கொண்டேபோகிறது. 'உள்ளே நுழைந்தும், வெளியே பறந்தும்' என்பதாகப்போய் வந்த காற்று, மீண்டும் மூக்கிற்குள் வராமல், போயே போய்விடுகிறபோதுதான் இங்கிதம் பண்ணிவந்த உடல், இயங்காமல் எல்லாவற்றையும் இழந்து அழிந்துவிடுகிறது. இந்த இடைப்பட்ட இயக்கங்களைத்தான், வாழ்க்கை என்ற வளமான சொல் லால் நாம் அழைக்கிறோம். வாழ்க்கை என்ற சொல் வளமானதா? வளமானது மட்டுமல்ல. பொருள் மிகுந்ததுங்கூட. ஆமாம்! வாழ்க்கை எனும் சொல், அர்த்தம் பொதிந்தது. ஆய்வுக்கும் மேலான அற்புதம்கொண்டது. நுட்பமானது. திட்பமானது. நுண்மைமிக்கது. நூதனம் நிறைந்ததும்கூட.