பக்கம்:நிலாப்பாட்டி.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

'இது யாருடைய சொத்தோ. இதை நான் எனக்காகப் பயன்படுத்தினால் கடவுள் அதைச் சரியென்று நினைக்கமாட்டார். இதுவரையில் நான் யாருடைய பொருளையும் எனக்காக எடுத்துக்கொள்ளவில்லை. சாகப்போகிற வயசிலே அப்படிச் செய்யலாமா?' என்று அவள் எண்ணினாள். நீண்ட நேரம் இப்படி நினைத்துப் பார்த்து, அந்தத் தங்கக் காசைத் தான் வைத்துக் கொள்ளக்கூடாது என்று நிலாப்பாட்டி முடிவு செய்தாள். ஆனால், அந்தக் காசை என்ன செய்வது? அதற்காக மறுபடியும் எண்ணமிடத் தொடங்கினாள்.

அந்த ஊரை ஆண்ட அரசன் மிகவும் நல்லவன். அவன் ஒரு ஏற்பாடு செய்திருந்தான். ஏழைகளுக்குச் சோறு போடவும், ஒரு பெரிய ஏரியுண்டாக்கி அதிலிருந்து தண்ணீரை நிலங்களுக்குப் பாய்ச்சவும் பணம் நிறைய வேண்டி யிருக்கிறதென்றும், செல்வமிருப்பவர்கள் தாராளமாகப் பண உதவி செய்ய முன்வர வேண்டு மென்றும் மக்களுக்குத் தெரியப்படுத்தியிருந் தான். கிழவிக்கு அது இப்பொழுது நினைவுக்கு வந்தது. அரசன் ஒரு பெரிய உண்டிப் பெட்டியை அந்த ஊர்க் கோவிலிலே வைத்திருந்தான். விருப்பமிருந்தால் யார் வேண்டுமானாலும் கோவிலுக்குச் சென்று, அதிலே பணம் போடலாம். அப்படிக் கிடைக்கும் பணத்தைக்கொண்டு ஏரி உண்டாக்க அரசன் எண்ணியிருந்தான்.

12