பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறங்கி உள்ளே போகத் தனிக்கட்டணம், வெளியிலேயே குளியலறை, குழாய் மூலம் கிணற்றுத் தண்ணீர் மேலே வர ஏற்பாடுகள் என்று நாகரிகப்படுத்தப் பெற்றுவிட்டன. அந்நாள்களில் மணல் மேடுகள் தான் எங்கெங்கும் பரந்து காணப் பட்டன. இப்போது கட்டிடங்களும் ஜனப்பெருக்கமும் நெருக்கடியும் தான் மிகுந்து காணப்படுகின்றன. ஒருசமயம் நவதிருப்பதி தரிசனத்துக்கு அப்பா ஏற்பாடு செய்து தந்தார். அவர் வரவில்லை. அம்மா, அண்ணன், தம்பி, நான் நால்வரும் வில்வண்டியில் பயணம் செய்தோம் வண்டிக்காரன் மாடசாமி தான் எங்களுக்குப் பாதுகாப்பு. பூரீவைகுண்டம் முதல் பெருங்குளம் கோயில்கள் வரை ஏற்கனவே பார்த்திருந்தோம். எனவே, பெருங்குளத்துக்குப் பிறகு உள்ள கோயில் களுக்குப் போனோம். ஒற்றைத் திருப்பதி தாண்டி உடைமரங்கள் செறிந்த பாதை வழி வண்டி செல்கையில், திடீரென மழை பெய்யத் தொடங்கியது. கோயிலுக்குச் சிறிது தொலைவு இருந்த போது, மழை வலுத்தது. கல்மழையாக அடர்ந்தது. ஐஸ் கட்டிகள் சிறு கோலி குண்டுகள் அளவில் வானிலிருந்து மழைநீரோடு கலந்து வந்து சாடின. வண்டிக் கூண்டில் பெருத்த ஓசை எழ மழை பெய்தது. வண்டிக்காரன் ஆலங்கட்டி - ஆலங்கட்டி என்று சொல்லி, குளிர்ந்த வெண்ணிறப் பனிக்கட்டிகளைப் பிடித்து எங்களுக்குத் தந்து கொண்டிருந்தான். வண்டியினுள்ளும் ஆலங்கட்டிகள் சாடின. அவற்றைப் பிடித்தெடுத்து வாயில் போட்டால் சிலீரென்றிருந்தது. குளிரால் பற்கள் கிட்டித்தன. மாடுகள் முன்னேறத் திணறின. நல்லவேளையாக, கோயில் மண்டபம் வந்து சேர்ந்தது. அவசரம் அவசரமாக வண்டியிலிருந்து இறங்கி நாங்கள் வேகமாக ஒடி மண்டபத்தை அடைந்தோம். வண்டிக்காரன் மாடுகளை அவிழ்த்து மண்டபத்தினுள் கொண்டு சேர்த்தான். சிறிது நேரம் மழை பலமாகப் பெய்துவிட்டு, வேகம் குறைந்து, படிப்படியாக மென்துறலாக மாறியது. விரைவில் அதுவும் ஒய்ந்தது. 82 28 வல்லிக்கண்ணன்