பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 ஆ நிலைபெற்ற நினைவுகள் என்கிற கட்டாயமும் அவருக்குப் பிடிக்கவில்லை. அதனால் அவர் அந்த வேலையை ஏற்றுக் கொள்ளவில்லை. கோவையில் நான்கு நாள்கள் தங்கிவிட்டு, திருநெல்வேலிக்கு திரும்பிச் செல்ல வேண்டியது தான் என்று அண்ணா எண்ணினார். வேறொரு இடத்தில் வேலையில் சேர்த்து விடுகிறேன் என்று பி.எஸ். செட்டியார் உதவ முன் வந்தார். வேலையும் கிடைத்தது. ஆயத்த ஆடைகள் (ரெடிமேட் டிரெஸ்ஸ்) தயாரித்து விற்பனை செய்கிற ஒரு நிறுவனம் அது. பெரிய அளவில் உற்பத்தி நடந்து கொண்டிருந்தது. வெளியூர்களுக்கும் அந்நிறுவனம் தனது தயாரிப்புகளை அனுப்பிக் கொண்டிருந்தது. முதலாளிகள் வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள். செட்டியாருக்கு வேண்டிய ஒருவர் அங்கு முக்கிய பொறுப்பு வகித்தார். அவர் தயவால் நல்ல சம்பளத்தில் அண்ணாவுக்கு கணக்கு எழுதும் வேலை கிடைத்தது. அண்ணா அந்த நிறுவனத்தில் பதினைந்து நாள்கள் தான் பணிபுரிந்தார். தனது மனசுக்குப் பிடிக்காத காரியங்களை செய்ய வேண்டியிருக்கிறது என்று அவர் வேதனைப்படலானார். அவர்கள் மூன்று கணக்குகள் வைத்திருக்கிறார்கள். உள்ளது உள்ளபடி எழுதப்பட வேண்டிய கணக்கு ஒன்று. விற்பனைகள், ஏற்றுமதியாகிறவை முதலியவற்றை மறைத்தும் குறைத்தும் எழுத வேண்டிய பொய்க் கணக்கு ஒன்று. வருமான வரிக்காரர்களை ஏமாற்றுவதற்காக இது. செலவுகளை அதிகரித்துக்காட்டி, நஷ்டத்தை மிகுதியாகக் காட்டக்கூடிய மற்றுமொரு கணக்கு தொழிலாளர்களையும் பங்குதாரர்களையும் ஏமாற்றுவதற்காக இருக்கும் இந்தக் கணக்கு. நேர்மை, நியாயம், உண்மை முதலிய உயர்பண்புகளைப் போற்றியும் கடைப்பிடித்தும் வந்த அண்ணா கோமதிநாயகத்துக்கு முதலாளிகளின் இந்தப் போக்கு பிடிக்கவில்லை. தனது மனஉறுத்தலைச் செட்டியாரிடம் சொன்னார். அவரோ சிரித்துக் கொண்டே, முதலாளிகள் எத்தனை கணக்கையும் வைத்துவிட்டுப் போறாங்க! அதனாலே உங்களுக்கு என்ன? அவங்க எதிர்பார்க்கிறபடி கணக்கை எழுதிக் கொடுத்தால், உரிய சம்பளம் கிடைக்கிறது அல்லவா? நீங்க ஏன் மனக்கஷ்டப்படனும்? வியாபார உலகம் அப்படித்தான் இருக்கும். பலதும் நடக்கும். நாம கண்டு கொள்ளக்கூடாது என்று உபதேசம் கூறினார். ஆனால் என் அண்ணாவின் மனம் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. எனக்கு வேலை செய்யப் பிடிக்கலே, ஊருக்கே போறேன் என்று சொல்லிவிட்டு, விடை பெற்றுச் சென்றார்.