பக்கம்:நீங்களும் இளமையாக வாழலாம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்களும் இளமையாக வாழலாம்

43


அந்த இடத்தை ஆக்ரமித்துக் கொள்கிறான். சுற்றி வந்த ஜனக் கூட்டம், பாராட்டி எழுதிய பத்திரிக்கைக் கூட்டம், கேளாமலே வந்த காசு பணம், எல்லாமே விடைபெற்றுக் கொண்டுபோய் விடுகின்றனவே!

உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுபவர்களின் நிலையும் இப்படித்தானே! அதிகார சுகம், அமர்க்களமான வரவேற்பு. திரும்பிய பக்கமெல்லாம் தொழும் கரங்கள். துணை கேட்கும் கண்கள். உதவி கேட்டு உயிரை வாங்கும் ஜனங்கள். அப்படி இப்படி வருமானங்கள்.

இப்படி இருந்தவர்களுக்கு, இடம் மாறிப் போகின்ற பொழுது வருத்தம் வராதா என்ன?

இந்த வருத்தம் வயதாகி விட்டதே என்பதால் அல்ல. வகித்த பதவியும் சுகித்த இன்பங்களும் போய்விட்டனவே என்ற கவலைதான். இன்னொருவன் வந்து தனது இடத்தைப் பிடித்துக் கொண்டு இன்பங்களை அனுபவிக்கின்றானே என்ற வேதனைதான்.

பிறகென்ன?
இவைகள் தான் மனிதனை முதுமையானவனாகக் காட்டுகின்றன. கவலைகளைக் கூட்டுகின்றன. கற்பனைப் பயங்களை ஊட்டுகின்றன. களைத்துப் போகும் சுருதியை கனவேகமாக மீட்டுகின்றன.

பிறருக்குப் புகழ் சேரும் போது, பிறர் நன்றாக உயரும் போதும், மனித மனம் பொறுக்காதுதான். அதுவும் தன் இடம் பறிபோகிறபோது தாங்கவே தாங்காதுதான்.

அதற்காக, வரும் எதிர்கால வாழ்க்கையை ஏன் பாழாக்கிக் கொள்ள வேண்டும்? மகிழ்ச்சி தரும் வழிகளை ஏன் மாற்றிக்