பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்களும் நோயில்லாமல் வாழலாம்

69


வேகமும் பாழ்பட்டு போகுமோ என்று குழப்பிக் கொள்ளாமல், உண்மை நிலையை உவந்து ஏற்றுக் கொண்டு இருத்தல்.

நாள் முழுவதும் களைப்பில்லாமல் தொடர்ந்து வேலை செய்து, அதன்பின் வருகின்ற இரவில் ஓய்வான மன உறக்கத்தைப் பெற்று நிம்மதியாக உறங்குதல்.

இப்படியெல்லாம் உடல் நிலையைப் பிரித்து. விளக்கங்களைத் தொகுத்துத் தருகின்றார்கள் ஆராய்ச்சி வல்லுனர்கள். ஏதோ ஒரு பெரிய விளக்கமாக இதனை நாம் எடுத்துக் கொள்ளாமல் நமது அன்றாட வாழ்வு ஆனந்தமாகக் கழிந்தாலே, அதுவே நலமான உடல் நிலை என்று கொண்டு வாழ்வோமே!

இவ்வாறு உடல் சுகத்துடன் வாழ்வதால் என்ன பயன் என்று ஒரு சிலர் ‘ஏடாகூடமாகக்’ கூட கேள்வியை எழுப்பலாம்.

நல்ல உடல்நலம் உள்ள தேகம், செம்மாந்த தோற்றத்தைக் கொடுக்கிறது, ஆண்மை நிறைந்த ஆளுமையை (Personality) அளிக்கிறது. அந்த செம்மாந்த தோற்றம், சிறந்த கவர்ச்சியை தேகத்திற்கு ஊட்டுகிறது. கவர்ச்சியான தோற்றம் பல வெற்றிகளை அளிக்கும் வாய்ப்பினை நல்குகிறது.

நிமிர்ந்த உடலின் அமைப்பு, நிமிர்ந்த நெஞ்சுரத்தையும் அளிப்பதால், நிகழ்த்தும் செயல்களில் நிறைவான ஊக்கத்தை உற்பத்தி செய்கிறது. அது வாழ்வின் முன்னேற்றத்திற்கு அச்சாரம் வழங்குகிறது.