பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்களும் நோயில்லாமல் வாழலாம்

77


ஆனதேயாகும். இந்த செல் (Cell) தான் நமது உடலின் ஆதார பூர்வமான உறுப்பாகும். அதாவது செல்களின் கூட்டம்தான் திசுக்கள் (Tissues) என்று உருவாகி, பலவிதத் திசுக்களின் கூட்டம்தான் உறுப்பு (Organ) என்று உருமாறி, பலவித உறுப்புக்களின் கூட்டம்தான் ஓர் அமைப்பு (System) என்று உருவாகி, பலவித அமைப்புக்கள்தான் உடலாக உருவாகியிருக்கிறது.

இந்தத் திசுக்களே பலவித அமைப்புக்களின் ஆதாரமாக, மிகவும் பலமாக விளங்குகின்றன, அவை காக்கும் திசுக்கள், பொருத்தும் திசுக்கள், தசைத் திசுக்கள் எலும்புத் திசுக்கள், நரம்புத் திசுக்கள், சுரப்பித் திசுக்கள், இரத்த அணுக்கள் என்றெல்லாம் மாறி, பல அமைப்புக்களாக மாறியிருப்பதையே, மண்டலம் என்பதாகவும் கூறி, நமது உடல் ஒன்பது மண்டலங்களாகப் பிரிந்து பணியாற்றுகின்றன என்றும் கூறுகின்றார்கள்.

எலும்பு மண்டலம், நரம்பு மண்டலம், ஜீரண மண்டலம், சுவாச மண்டலம், இரத்த ஓட்ட மண்டலம், என்றெல்லாம் நீங்களும் அறிந்ததுதான்.

மண்டலங்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று உடன்பட்டு ஒத்துழைத்தே பணியாற்றுகின்றன. வேண்டியவற்றை வளர்த்துக் கொண்டு, வரவழைத்துக் கொண்டு, விரும்பி ஏற்றுக் கொண்டு, வேண்டாத பொழுது விலகியும் விலக்கியும், அழித்து மாற்றியும் இவைகள் பணியாற்றுவதால்தான், உடல் திறமானதாக, வளமானதாக இயங்குகின்றது.