பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

w. சொக்கலிங்கம் பிள்ளை 75

நான் யோசித்தேன். திருச்சி வக்கீல் திரு அரங்கசாமி ரெட்டியாரைக் கலந்து பேசி இதற்கு வழிவகைகள் காணலாம் என்று எண்ணி அவருக்குக் கடிதம் எழுதினேன் இந்த வக்கீல் நண்பர் சதா வெளியூர்ப் பயணத்தில் இருப்பதால், இவர் திருச்சியில் இருக்கும் நாள் குறிப்பிட்டு எழுதினால் நானும் சொக்கலிங்கம் பிள்ளையும் அந்நாளில் வருவதாக எழுதினேன். எங்கள் வருகை ஒரு "வாழ்க்கைப்படி வழக்கு" பற்றியது என்றும் குறிப்பிட்டு எழுதியிருந்தேன் திரு அரங்கசாமி ரெட்டியார் ஒரு நாள் குறிப்பிட்டுத் தாம் அந்நாளில் புதுக்கோட்டைக்கருகிலுள்ள ஓர் ஊருக்கு ஒரு முக்கிய அலுவல் நிமித்தம் வருவதாகவும் ஊர்ப் பெயர் இப்போது நினைவில் இல்லை. நாங்கள் அங்கு வந்தால் உதவுவதாகவும் பதில் தந்திருந்தார்.

வக்கீல் குறிப்பிட்டிருந்த அந்நாளில் அந்த ஊருக்குச் சென்று அவரைச் சந்தித்தோம் சொக்கலிங்கம் பிள்ளை தம் கதையை வக்கீலிடம் ஆதியோடந்தமாக விவரித்து விளக்கித் தமக்கு வந்த நோட்டிசையும் அவரிடம் தந்தார். உடனே வக்கீல் பதில் நோட்டீசுக்குத் திட்டமிட்டு அதில் பன்னிரண்டு அண்டுகட்கு முன்னர்த் தம்மை நட்டாற்றில் விட்டதுபோல் கைவிட்டுச் சென்றபோது தான் கொண்டு வந்த சாமான்களை எடுத்துப் போனதுமன்றி தாம் இல்லாதபோது தாம் போட்ட நகை தாலிக்கொடி இவற்றையும் (சுமார் நாற்பது சவரன் மதிப்பு), வேறு பல சாமான்களையும் எடுத்துச் சென்று விட்டதாகவும். தாம் பல தடவை தம் இல்லத்திற்கு வந்து வாழுமாறும் நேரில் கேட்டும் கடிதம் எழுதியும் சில பெரியோர்களை அனுப்பி வருமாறு வேண்டியும் வராமல் அலட்சியம் செய்துவிட்ட படியால் இனி முதுமைக் காலத்தில் தாம் அவளுடன் வாழ விரும்பவில்லை என்றும், அப்படி வாழ்ந்தால் நஞ்சு வைத்துத் தம்மைக் கொன்றுவிடும் அச்சம் இருப்பதாகவும். இந்நிலையில் வாழ்க்கைப்படி கேட்பது நியாயம் அல்ல என்றும், அப்படி ஏதாவது வழக்கு தொடர்ந்தால் தக்க வக்கீலைக் கொண்டு எதிர்க்கப்படும் என்றும் குறிப்பிட்டு பதில் நோட்டிசு அனுப்பினார். இந்த நோட்டிசைக் கண்டதும் அவர்கள் அடங்கிப் போனார்கள் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.