பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 நீங்காத நினைவுகள் அரங்கக் கொட்டகை முழுவதும் தீக்கடவுள் வசமாயிற்று காண்ட்வ தகனம்போல் நடைபெற்றது. இந்தத் தகனம் நடைபெற்றபோது இந்திரன் மழைபொழிய அருச்சுனன் அதைத் தடுத்து நிறுத்தினான். தீயணைக்கும் பொறிக்கு ஏற்பாடு செய்வதற்குள் நல்ல உயர்ந்த மெத்தையுடன் கூடிய இருக்கைகள் யாவும் சாம்பலாயின. நேரில் கண்ணுற்றவர்கள் அழாமல் இருக்க முடியாது. பெருநட்டம் ஒருபுறமிருக்க, அழகே வடிவங் கொண்ட ஒரு கலை மண்டபவம் முடியும் நிலையில் இப்படி நாசமானது நெஞ்சை உருக்கும் செய்தியாகி விட்டது. தமது கற்பனைச் சிறகைப் பறக்கவிட்டு அல்லும் பகலும் பாடுபட்ட துணைவேந்தர் டாக்டர் ரெட்டியின் மனம் என்ன பாடுபட்டிருக்க வேண்டும் என்பதை உணர்ந்து கூடப் பார்க்க முடியாது. - - துணைவேந்தரின் மனம் தளர்ந்து போகவில்லை. இறைவழிபாட்டில் தோய்ந்தவராதலால் இவர் மனம் ஒடிந்து போகவில்லை. இஃது இறைவன் திருக்குறிப்பின்படியே நடைபெற்றிருக்க வேண்டும் என்று நம்பினார். ஒரு சமயம் திருவேங்கடமுடையானைத் தரிசிக்கச் சென்ற "கியூ" வரிசையால் நெருக்கித் தள்ளும் நிலை (stampede) ஏற்பட்டுப் பத்துப் பதினைந்து பேர் மாய்ந்து போகும் நிலை ஏற்பட்டது. பக்தர்கட்குக் கூட - அதுவும் இறைவழிபாட்டிற்காக செல்லும் பக்தர்கட்கும் - இந்நிலை ஏற்படவேண்டுமா? என்று பக்தர் உலகமே திடுக்கிட்டது. வகையறியாது குழப்பத்தில் ஆழ்ந்தது. நாளேடுகளில் இந்தச் செய்தியைக் கண்டதும் அறிஞர் உலகம் தம்பித்து நின்றது. இறைவழிபாட்டில் நம்பிக்கை அற்றுப் போகுமோ என்று அஞ்சியது. அவ்வமயம் காஞ்சி முனிவர் (பெரியவர் "திருக்கோயில் நிர்வாகத்தில் ஏதோ குறை உள்ளது. அஃது இன்னது என்று குறிப்பிடமுடியாது. அதன் அறிகுறியே இந்த விபத்து, கோயில் நிர்வாகம் மனத்தைச் சோதித்து குறையைப் போக்கிக் கொள்ளட்டும்" என்ற செய்தியை வெளியிட்டார். இதனைத் துணைவேந்தர் டாக்டர் ரெட்டி படித்திருக்க வேண்டும்; அதைப் பன்முறை சிந்தித்து உணர்ந்திருக்க வேண்டும். பல்கலைக்கழகம் கலைமகளின் பெருங்கோயில் அல்லவா? -