பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. வெள்ளைவாரணனார் . 223 தொலைவிலுள்ள கபில தீர்த்தம் சென்று நீராடி வருவோம். இந்த நடைப்பயணம் ஆராய்ச்சிப் பயணமாகவும் இருக்கும். "திருமுறை" என்ற தொடர்பற்றி விளக்கம் தந்து வந்தார் வெள்ளை வாரணனார். "திரு" வென்பதற்கு "இன்பம் வந்தாலும் துன்பம் வந்தாலும் இரண்டையும் ஒப்பக் கருதும் மனச்செம்மையே" என்று பேராசிரியர் என்னும் உரையாசிரியரைப்பற்றி விளக்கம் தந்தார். இத்தகைய பெரியோர்களைக் "கேடும் ஆக்கமும் கெட்டதிருவினார்" என்று சேக்கிழார் பெருமான் குறிப்பிட்டுள்ளதை எடுத்துக் காட்டுவார். இந்த மனஉறுதி வழங்கவல்லவன் பேரருளாளன், முழுமுதற் பொருளாகிய இறைவன் ஒருவனே என்பதைக் குறிப்பிடுவார். இவ்வாறு இறைவன் தம் அடியார்கட்கு வழங்கும் துளக்கமிலா மனச் செம்மையை "திருநின்ற செம்மை" என்று திருத்தொண்டத் தொகையில் 4-ஆம் திருப்பாடல் நம்பியாரூரர் போற்றுவதையும் சான்றாக்குவார். இத்தகைய சான்றோரின் வாழ்க்கை முறை "திருநெறி" என்று ப்ெரியோரால் வழங்கப் பெறுவதாகவும் விளக்குவார். இத்தகைய திருநெறியினை வகுத்தருளிய சான்றோர்களாகிய திருமூலர் காரைக்காலம்மையார், சைவசமய குரவர்களாகிய நால்வர் முதலி யோர் திருவாய்மலர்தருளிய திருப்பாடல்களே "திருநெறித்தமிழ்" எனவும் "திருமுறை" எனவும் வழங்கப் பெறுகின்றன என்று தெளிவுறுத்துவார். இதனை இன்று நினைவு கூர்கின்றேன். நினைவு 3 : இந்தக் காலத்தில் ஒருநாள் மாலை எங்கள் இல்லத்திற்குச் சற்று அருகில் இருந்த தியாகராஜ மண்டபத்தில் ஏதோ இசைக்கச்சேரி நடைபெற்றது. அழைப்பு வந்திருந்தது. அடியேனும் வெள்ளை வாரணனாரும் அதற்குச் சென்றிருந்தோம். இம்மாதிரி நிகழ்ச்சிகட்குச் சென்றால் திருப்பதியிலுள்ள பல நண்பர்களைச் சந்திக்க முடியும். எனக்கு இசையில் அதிக ஈடுபாடு இல்லாவிடினும் அதனை மெய்மறந்து அனுபவிப்பதுண்டு தாளம், பண் முதலிய வற்றை இனங்கண்டு அநுபவிக்கும் ஆற்றல் இல்லையாயினும் மகுடியை அநுபவிக்கும் நாகம்போல் சிலபோது கண்ணை மூடிக்கொண்டு மெய்மறந்து இருக்கும் நிலைகளும் உண்டு.