பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

முடியாமல் சந்திரிகா அழுது கொண்டேயிருந்தாள். அன்று இரவு அவள் சரியாகத் துரங்கவில்லை. மறுநாள் காலையில் வேறொரு பாதையில் மூன்று பெண்களையும், அழைத்துச் சென்று நிச்சயம் திரும்பி வர முடியாத இடத்தில் விட்டுவிட்டு வருவதாக அசமந்தராஜரிடம் அகங்கார வல்லபி சொல்லிக் கொண்டிருந்தாள். அது சந்திரிகாவின் காதில் விழுந்துவிட்டது.

உடனே சந்திரிகா மெல்லத் தன் படுக்கையில் இருந்து எழுந்தாள். ஒசைப்படாமல் வீட்டைவிட்டு வெளியில் வந்தாள். காட்டுமரங்களில் சில பழங்களைப் பறித்துக் கொண்டாள். தன் காவல் தெய்வத்தைப் பார்க்கப் புறப்பட்டாள். முதலில் அவளை ஏற்றிச்சென்ற அதே அருமையான குதிரை இப்பொழுதும் அவளைச் சுமந்து சென்றது. சில நிமிடங்களில் அவள் தேவதை அருளுடையாள் முன்வந்து நின்றாள். தான் கொண்டு வந்திருந்த பழங்களைத் தேவதைக்குப் படைத்தாள். தேவதை அதற்காக நன்றி கூறித் தானும் சில வெகுமதிகளைச் சந்திரிகாவுக்குக் கொடுத்தாள். பிறகு அவள் சந்திரிகாவைப் பார்த்து, "பெண்ணே, இப்பொழுது உனக்கு ஒரு பை நிறையச் சாம்பல் தருகிறேன். உன் சிற்றன்னை உங்களை நடுக்காட்டில் விட்டுவிட்டு வருவதற்காக உங்கள் வீட்டிலிருந்து அழைத்துச் செல்லும்போது சாம்பலை வழி நெடுகத் தூவிக்கொண்டே போ. அதில் உன் காலடித் தடங்கள் பதிந்திருக்கும். அந்த அடையாளத்தைக் கொண்டு நீ வீட்டுக்குத் திரும்பி விடலாம். ஆனால், உன். அக்காள்மார்களை உன் கூடக் கூட்டிக்கொண்டு வராதே அவர்கள் பொல்லாதவர்கள். அவர்களை வீட்டுக்கு கூட்டிவந்தால், மறுபடி நான் உன்னைப் பார்க்கவேமாட்டேன்!” என்றாள்.

ஒரு பை சாம்பலையும், ஒரு பெட்டி வைரத்தையும் தேவதையிடமிருந்து சந்திரிகா வாங்கிக் கொண்டு குதிரையேறித் தன் குடிசைக்கு வந்து சேர்ந்தாள்.