பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25



மறுநாள் காலையில் அகங்காரவல்லபி தன் பெண்களை அழைத்து, "அப்பாவுக்கு உடம்பு சரியில்லை. அவருக்கு மருந்து கொடுக்கக் காட்டில் இருந்து சில மூலிகைகள் பறித்துக் கொண்டு வரவேண்டும். வாருங்கள். நாம் போய் அந்த மூலிகைகளைத் தேடிப் பறித்துக்கொண்டு வருவோம்" என்று கூறினாள்.

அவ்வாறு சிற்றன்னையோடு போகும்போது, காவல் தெய்வம் சொல்லியபடி சந்திரிகா வழி நெடுகிலும் சாம்பலைத் தெளித்துக் கொண்டு போனாள்.

மறுபடியும் அவர்கள் நடுக்காட்டில் தூங்குகிற சமயம் பார்த்து, அகங்காரவல்லபி அவர்களை அனாதரவாக விட்டுவிட்டு வந்துவிட்டாள். அக்காள் இரண்டு பேரும் அழுத அழுகையைப் பார்க்கப் பொறுக்காமல், சந்திரிகா அவர்களையும் கூட்டிக்கொண்டு தன் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். அசமந்தராஜரும், அகங்காரவல்லபியும் அவர்களைத் திரும்பக் கண்டு பெரிதும் ஆச்சரியப்பட்டார்கள். அவர்கள் இருவரும் அன்று இரவு முழுவதும் பேசிக் கொண்டிருந்து, தங்கள் பெண்களை விரட்டியடிப்பதற்கு வேறொரு திட்டம் வகுத்தார்கள்.

சந்திரிகா, தன் அக்காள்மார்களிடம் தான் தேவதையின் சொல்லை மீறி அவர்களையும் கூடக் கூட்டிக் கொண்டு வந்துவிட்டபடியால், இனிமேல் அந்தக் காவல் தெய்வம் உதவி செய்வாள் என்று எதிர்பார்க்க முடியாது என்றாள்.

"பூ! அந்தக் கிழட்டுத் தேவதை அருளுடையாளுக்கு மட்டும்தான் அறிவு இருக்கிறதா? நம் சிற்றன்னை மறுபடியும் நம்மை நடுக்காட்டில் விட்டு வருவதற்காக நம்மை அழைத்துச் செல்லும்போது நாம் பயறுகளை எடுத்துக்கொண்டு செல்வோம். நெடுக அவற்றைப் போட்டுக் கொண்டே போனால், திரும்பவும் நாம் வழியைக் கண்டு பிடித்துவிடலாம்"