பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

81


செய்வதற்கு ஆணவ ஆசை அதிகம் படைத்தவள். யாருக்கும் தன்னைப் பிடிக்கவில்லை என்றாலும் எல்லோரும் தனக்குக் கீழ்ப்படிந்து அடங்கி நடக்க வேண்டும் என்று அவள் விரும்பினாள். அவள் வயதான சிவந்திபுர மன்னருக்கு இளைய ராணியாய் வந்து சேர்ந்ததும் அவள் விரும்பியதெல்லாம் நடந்தது.

ராஜகுமாரன் தேவப்பிரியனுக்கு இருபது வயது நடக்கும் போது சிவந்திபுர மன்னர் காலமாகிவிட்டார். ராஜகுமாரன் தேவப்பிரியன் அரியணை ஏறி சிவந்திபுரத்திற்குப் புதிய மன்னனாக முடிசூடிக் கொண்டான் . இளம் வயதினனாக இருந்த தேவப்பிரியனும், அவனுடைய சிற்றன்னை பானுமதியும் ஒருவருடன் ஒருவர் சண்டையடித்துக் கொள்ளவில்லை. ஏனெனில், பானுமதிக்குச் சொந்தப் பிள்ளையொன்றும் கிடையாது. ஆகவே அவள்தன் மூத்தாள் மகனாகிய தேவப்பிரியனை வெறுத்து ஒதுக்கவில்லை. தேவப்பிரியனுக்கோ சின்ன வயதிலேயே அன்னை இறந்து விட்டாள். ஆகவே, சிற்றன்னையையே தன் அன்னையாக எண்ணி அவளிடம் அன்பு பாராட்டி வந்தான்.

தேவப்பிரியன் பல ஆண்டுகள் தன் ஆட்சியை நன்றாக நடத்தி வந்தான். ஒருநாள் அவன் வேட்டைக்குப் போகும் போது, வழியில் ஒரு குடியானவனுடைய குடிசையின் முன்னால் மூன்று பெண்கள் பேசிக் கொண்டிருந்தது அவன் காதில் விழுந்தது. குடியானவனின் மூன்று பெண்களும் முதல் நாள் இரவு தாங்கள் கண்ட கனவைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

'நான் ஒரு சோற்றுக் கடைக்காரனைத் திருமணம் செய்து கொண்டதாக கனவு கண்டேன்” என்றாள் மூத்த பெண்.

நீ.மு. 6