பக்கம்:நூறாசிரியம்.pdf/138

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

நூறாசிரியம்

இவ்வாறு பேணுகின்ற உணர்வு ஒரு தாய்க்கு இயல்பாகவே அமையுமெனினும், இயல்பு திரிந்த இக்காலத்துக் குழந்தை தொட்டிலினின்று விழுந்து, அழுது கிடந்தாலும், தன்னுறக்கத்தினின்று விழியாத தாயாரும் உளர். அன்னவர் போலன்றித் தன் தலைவி “இளமென்பூவுடல் இடையிடைப் பேணும்” பெற்றியளாயிருத்தல் தலைவற்கு வியப்பினை யூட்டிற்றென்க. இவ்வாறு இரவில்தான் தொடர்ந்து உறங்காது இடையிடையெழுந்து தன் குழந்தையைப் பேணும் பெற்றி வாய்ந்தாள் அருளுடையளாதல் வேண்டும் என்பது பற்றி அருள்விழி மூடும் அன்னை என்றான் என்க. விழிகள் மூடுவதல்லது உறங்குதல் செய்யா என்னும் குறிப்பினை அறிக.

இத்தகையளாகிய அன்னைக்கு, இருள் கழியும் தன்மை வாய்ந்த இவ்வுலகம் ஈடிறந்தது என்பது தலைவன் கூற்றாகும்.

ஈடிறந்தன்று இணயைற்றது.

குழவியின் பசியறிந்து பாலூட்டியும், உடல் நலுங்காது குளிப்பித்தும், புனைவித்தும், உறங்குவித்தும், பகலிற் பேணியவள் இரவிலும் தான் முழுமை உறக்கம் கொள்ளாது இடை இடை எழுந்து அதனைப் பேணும் அருள் வாய்ந்த தன்மைக்கு இவ்வுலகமும் ஈடாகாது என, அண்மையில் தாய்மைப் பேறுற்ற தன் தலைவியைப் பார்த்துத் தலைவன் கூறியதாகும் இப்பாடல்.

இது, முல்லை யென் திணையும், புதல்வற் பயந்த தலைவியின் தாய்மைத் திறம் வியந்ததென் துறையுமாகும்.