பக்கம்:நூறாசிரியம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

நூறாசிரியம்

ஆகலின் அதனையும் அகற்றி விடுதலே நின் கருத்துப் படி சிறந்ததாகும். இவ்வாறு செய்வது பெண்மைக்கே இழுக்காகும் என்பையாயின், அம்மே, நினக்குப் புரியுமாறு உணர்த்துவது எப்படி?

செறிந்திருக்கின்ற அழகு என்பது யாது எனச் சான்றாண்மை மிக்க நூலாசிரியர் எதனை இயம்பினர் எனில், பூப்பொதிந்த கூந்தலையுடைய கவர்ச்சி மிக்க பெண்டிர்க்கு என்றும் அப்பூப் போலும் பொருந்தியிருந்து அழகும் நன்மையும் தருவதாகிய நாணமும், மணமும் ஒளியும் நிறைந்த நெற்றியை உடைய மகளிர்க்குக் குற்றமிலாத உள்ளமும், செங்கனிபோலும் வாயை உடைய அவர்களுக்குத் தவறு சேராத ஒழுகலாறும், அப்பெண்மையைக் காவல் செய்வதாகிய அச்சம் என்ற கதவமும், குற்றமில்லாத உரையும் என இவை தாமே அல்லாது அப்பெண்டிரை வெற்றி கொள்ளக் கருதும் ஆடவர் தம் உள்ளத்தை வீழ்த்தி அடிமைப் படுத்துவன வேறு அல்ல.

விரிப்பு :

இப்பாடல் புறத்துறையைச் சார்ந்தது.

பெண்டிர்க்கு வேண்டிய தற்காப்புப் பண்பியலை ஞெகிழ விட்ட ஒர் இளமகள் தனக்கு அவள் கைக்கொள்ள வேண்டிய அரும் பண்பியல்புகளைக் கூறி, சான்றோர் அறிவுறுத்தியதாகும், இப்பாட்டு.

ஆடவரைக் கவர்வதன் பொருட்டு, உடலின் அகவெழிலைப் புறங்காட்டும் ஆடையுடுத்து நடைபயிலும் ஓர் அழகிக்கு, அவ்வெழிற் புனைவுகளால் மனக்கிளர்ச்சி யுறுவார், ஆண்மை குறைந்த ஆடவர்தாம் என்பதையும், ஆண்மைமிக்க ஆடவர் அவற்றிற் கருத்து வையார் என்பதையும், அத்தகைய ஆடவருள் ஒருவன் மனத்தைக் கவர்ந்திழுத்து அவன் அன்பைப் பெறவேண்டின், பெண்மைக்குகந்த நாணும், புரையில் நெஞ்சும், தவறற்ற நடையும், அச்சமும், குற்றமுமிலாத உரையும் ஆகிய பண்புகளே என்றும் அறிவு கொளுத்தினார் என்க.

முற்றச் சிலம்பியின் நுண்ணிழை: மனையின் முற்றத்தே கட்டியிருக்கும் சிலந்தி வலையின் நுண்ணிய இழை. காட்டுச் சிலந்தியின் வலையின் இழையினும் வீட்டுச் சிலந்தியின் வலையிழை மெல்லியதாகையால் முற்றச் சிலந்தி எனக் கூறப்பெற்றது.

பஞ்சினின்று இழுக்கப் படுவதால் நூல், இழை எனப்பெற்றது. சிலந்தியினதும் அதுவே.

பெய்த - இடைச்செருகிப் பின்னிய - நெய்த

அற்றங் காவா ஆடை - மறைப்புறுப்புகளைக் காவாமல் வெளிப்படுத்தியவாறு நெய்த மெல்லிய ஆடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/152&oldid=1220828" இலிருந்து மீள்விக்கப்பட்டது