பக்கம்:நூறாசிரியம்.pdf/203

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

177

வாழ்வுமுறைகளைப் பயில்வதன் பொருட்டுப் பிரிந்து செல்லும் மகனே! வீசுகின்ற அலைகளையுடைய கடலில் உராய்ந்து சென்று வழி தவறி விடும் கப்பல்களைக் கூவியழைத்துக் கரைசேர்க்கும் சுழல்கின்ற கலங்கரை விளக்க ஒளிக்கதிர்கள் தடவிச் செல்லுகின்ற உயர்ந்த மாடங்களைக் கொண்ட சென்னையென்னும் அழகிய நகரின், ஒவியம் போன்ற தெருக்களும், அரசுப் பணி நிகழும் அரண் சேர்ந்த கட்டடமும், அறநெறிகளை ஆய்ந்து தீர்ப்புத் தரும் அறமன்றமும், வினையின் பொருட்டாதல், வினையின்மை பொருட்டாதல் பல திசைகளிலும் விரைந்து திரிகின்ற மக்கள் கூட்டமும், காடுகளில் பிடிக்கப் பெற்ற விலங்குகளை அடைத்து வைத்துக் காட்டும் காட்சியும், அவை போலும் இறந்து போன விலங்குகளின் தசைகளை நீக்கி அவற்றின் தோல்களால் பொய்யாய்ச் சமைக்கப் பெற்று உயிருள்ள உடல்கள் போல் தோற்றுவிக்கும் வியப்புப் பொருந்திய பழம் பொருள் காட்சியும், துய்ப்பதற்குரிய பல நுகர்ச்சிப் பொருள்களும், அவற்றால் விளையும் நோய்களைப் போக்குகின்ற மருத்துவமனைகளும், செப்பமில்லாத உள்ளமுடையவர்களை நாற்புறத்தும் கவர்ந்து அடிமைப்படுத்தும் ஒளியுருப் படக்காட்சிகளும் ஆரவார ஒலிகளின் பெருக்கமும், களியாட்டங்கள் நிறைந்த ஒதுக்குப் புறங்களும், ஆரவாரம் மிகுந்த கடைத்தெருக்களும், விலை வைத்துக் கூவி உடன்பட்டவர்களைத் தழுவிப் பல வகை நோய்களைத் தோற்றுவிக்கின்ற, பொலிவுமிக்க உடல்களையுடைய பெண்மைச் சிறப்பு நீங்கிய மகளிரும், புறத்தே புனைவு மிகுந்து மயக்கத்தைத் தருகின்ற தீமை மிக்க நாகரிகத்தின் அறம் பிறழ்ந்த செயல்களும் ஆகிய இவை சிறப்பானவை அல்ல. புகழ்பெறுகின்ற கல்வியைவிட உயர்ந்தது ஒழுக்கம். இகழ்ச்சி பெறுகின்ற வாழ்வைவிட மாய்ந்து போவது நல்லது. உடல் தசைகளை வளர்க்கப் பெறுவதன்று வாழ்க்கை நல்ல உடல் அமைப்புடன் கூடிய நல்லறிவும் நல்லுணர்வும், இனி அவற்றை விட உள்ளத்து உண்மையும் செறிந்து விளங்குவதே, உயிர் வாழ்க்கைக்குச் சிறப்புத் தருவதாகும் என்றார் முன்னோர். அதனால் உண்ணுவதும், உடுப்பதும், அவற்றுக்குத் தேவையான பொருள்களை எவ்வகையானும் ஈட்டுவதும் கற்றுக் கொள்வதன்று கல்வி : உயிர் வளர்ச்சிக்குள்ள தடைகள் அகலும்படி, அதற்குப் பொருந்திய உள்ளுணர்வின் எழுச்சியாகும் அது!

விரிப்பு:

இப்பாடல் புறத் துறையைச் சார்ந்தது.

கல்வி கற்பற்காகப் பெற்றோரைப் பிரிந்து செல்லும் மகனிடம், உலகியல் உணர்ந்த தந்தையார் அறிவுரை கூறித் தெளிவுறுத்துவதாக அமைந்ததிந்தப் பாடல்.

‘பிரிதலுறும் மகனே! நீ கல்வி கற்கப் புகும் நகரின் சிறப்பியல்களாக நீ கருதிக் கொண்டிருக்கும் அவையல்ல உயர்ந்தன. கல்வியே உயர்ந்தது;