பக்கம்:நூறாசிரியம்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178

நூறாசிரியம்

அக் கல்வியினும் உயர்ந்தது ஒழுக்கம். ஒழுக்கம் திரிந்த இழிவான வாழ்வைவிட இறந்து போதலே நல்லது. உடல் நலமும் உள்ள நலனும் நடை நலனும் சேர்வதே உயிர் வாழ்க்கைக்குச் சிறப்புத் தருவது. எனவே உண்பதும், உடுப்பதும், அவற்றுக்கான பொருளைத் திரட்டுகின்ற வழிமுறைகளைக் கற்றுக் கொள்வதுமே கல்வி என்று பிறழ உணராமல், உயிரின் முன்னேற்றத்திற்குத் தடையாயுள்ள முட்டுப்பாடுகளைத் தவிர்த்துக் கொள்ளும் மெய்ப்புலன் எழுச்சியே கல்வியாகும் என்று உணர்ந்து கொள்!” -என்று அறிவுறுத்துவதாக அமைந்ததிப்பாட்டு.

இப்பாட்டில் கல்வியின் முழுச் சிறப்பும், நோக்கமும், பெருமையும் கூறப்பட்டன.

மகன் ஒருவனது கல்வி நலனில் அவனைப் பெற்றோர்க்கே, அதினும், அவன் தந்தைக்கே மிகுந்த அக்கறை இருத்தல் உலகியில்பு ஆதல் பற்றித் தந்தையின் கூற்றாக இது கொள்ளப் பெற்றது. உண்மைக் கல்வி எவ்வாறிருத்தல் வேண்டும் என்பதைச் செவியறிவுறுத்தலாகவும் கூறப்பெற்றது என்க.

பிரிவுறும் மகனே! - பிரிதலுறும் மகனே! பிரிதலுறும் மகனே என மும்முறை அடுக்கியது, அன்பும், உரிமையும், அக்கறையும், கடமையும், ஆற்றாமையும், எச்சரிக்கையும் போன்ற பல உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டி என்க! பிரிவு கல்வியென்னும் இயற்கைக் கரணியம் பற்றி நிகழ்வதாகலின், உறுதல் என்னும் தன்வினை நேர்ச்சிச் சொல்லால் உணர்த்தப் பெற்றது.

மகன் என்னும் அகடுஉ முன்னிலையால் விளிக்கப்பெற்றது, பெற்றோர் உடன்போகாத் தனிமை குறித்தலான் என்க. மகடூஉ வாயின் உடன் துணை போகும் நேர்ச்சியான், பிரிவுறு வினை நிகழாதென்க.

அறிவமை - பயில - ஆன்றவித்தடங்கிய சான்றோர் இருந்து பயிற்றும் கழகமாகலின் அறிவமை கழகம் எனப் பெற்றது. இனி, நாள்தொறும் பெறும் அறிவு வளர்ச்சிக்கேற்பப் பயிற்றுவித்தல் கல்விக் கொள்கையாகலின், அன்றன்றாயும் எனப் பெற்றது.

நெறிமுறை - என்றது, உலகின் இயற்கை நெறிகளையும், வாழ்வியல் நெறிகளையும் முறையாகப் பயிற்றுவிக்கும் கல்வியை என்க. கல்வி தன் முயற்சியால் விளையும் உணர்வாகலின் பயில எனப் பெற்றது.

எறிதிரை முந்நீர் இழைந்து எழுந்து வீசுகின்ற அலைகளையுடைய கடல் நீரில் உராய்ந்து.

அதர் தப்பிய கலம் - வழி தவற விட்ட கப்பல், கடல் நீரைக் கிழித்துக் கொண்டு தன் வழியில் போகப் புறப்பட்ட கலம், கடல் நீரின் போக்கில் சென்றதால் வழி தப்பியதை “முந்நீர் இழைந்து அதர் தப்பிய” என்பதால் உணர்த்தப் பெற்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/204&oldid=1208919" இலிருந்து மீள்விக்கப்பட்டது