பக்கம்:நூறாசிரியம்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

187

நூறாசிரியம்

கொழு - ஏர்க்கொழு, மூக்குக்கு ஏர்க்கொழுவை உவமித்தது அதன் முப்பட்டை உருவமும் கூர்மையும் பற்றி.

மூக்கும் மன்னோன்: மூக்கும் பொருந்தியவன். மன்னுதல் பொருந்தியிருத்தல்.

அருளுமிழ் கண் - உயிர்களிடத்து வேற்றுமையின்றி அன்புப் பார்வை வீசும் கண்கள்.

அத்தகையவன் என்மேல் அப்பார்வையை வீசினால் என்ன என்று ஏக்கம் புலப்படப் புலந்த உணர்வுடன் கூறினாள் என்க.

கண்ணோடு அணைந்து அடிவடிந்து சுரிமயிர் தடவிய விரிசெவி - கண்களின் புற ஓரத்தொடு இணைந்து நின்று, அடிப்பகுதி நீள இறங்கிய வாறு, காதுப்புறம் சுருண்ட மயிர் தடவிக் கொண்டிருக்க விரிந்துள்ள செவிகள். செவிகளை இவ்வாறு நீள வண்ணித்தது, தன் காதல் மொழிகளைக் கேளாத அவற்றிற்கு இத்துணை அழகோ, எனப் புலந்து ஏங்கியது. தன் மொழி கேளாக்காதுகள் விரிந்து நின்று என் பயன் என்று வெறுத்ததுமாம். அரியிதழ் பருக்கைக் கல் போலும் பருத்து செவ்விய மெல்லொளி படர்ந்த இதழ்.

நீரான் உருட்டப்பெற்று, அதன் மேற்புறத்துச் சொர சொரப்பாய பகுதிகள் அரிக்கப்பெற்று, உருண்டு திரண்டதால் பருக்கைக் கல் அரியென்னும் பெயரினதாயிற்று. இனி, அரி என்பது, அழகு என்றும் செவ்வரி என்றும் பொருள் பெற்று, அழகிய, சிவந்த கோடுகள் சார்ந்த இதழ் என்றும் பொருள் தருமாம். ஆயினும் உருவும் ஒளியும் நோக்க முன்பொருளே பொருத்தமும், பின் பொருளை அளவியதும் ஆகும் என்க.

அடுக்கிய நகை - வரிசையுற அடுக்கப் பெற்றாற் போலும் எயிறு. நகை ஆகு பெயராய் இடத்தைக் குறித்து, எயிறு என்னும் பொருள் பெற்றது.

இனி, எயிறு என்பது தோன்றா நின்று, நகை என்பதைப் புன்னகை யவிழ்க்கும் வாய் என்றலும் ஆம்.

மலை யிழிந்து இறங்கிய -மலையினின்று நழுவி இறங்கிய

கலையுணர் அருவி - கலையுணர்ச்சியைப் புணர்த்துவிக்கும் அருவி.

அருவி அலை எனப்புடைத்த - அருவி நீரின் அலைகள் எனப் பருத்து நின்ற. கடல் அலை மிகவும் புடைப்பு உடையதாகலின் அலை உவமமாயிற்று.

அருட் கை - அருள்கின்ற கை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/213&oldid=1208966" இலிருந்து மீள்விக்கப்பட்டது