பக்கம்:நூறாசிரியம்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

233

(17-26) செந்நிறந் தாங்கிய புதுமழை வெள்ளத்தைப்போலும் பொங்கி யெழுந்தவராகித், தமிழ்மொழியின் மேல் தாம் வைத்த பற்றாகிய புதுமைக் கொள்கையினைத் தெருத் தோறும் முழக்கி, வைகறை தொடங்கிக் கதிரவனொடு ஏற நடந்து, இரவின் நடு யாமத்திலும் துயில் கொள்ளாத வீரவுணர்வு கொண்டவர்கள் இவர்கள். மாற்றார் நிலத்தைத் தாம் கொள்ள வேண்டி இவர்கள் ஒன்று திரண்டவர்கள் அல்லர் பொன்னையும் விரும்பினர் இல்லை; எதற்காகத் தாம் போராடவேண்டும் என்ற நோக்கமும் அரும்பாத அகவையினர்; நுண்ணிய போர்க்கலைகளைப் பயின்றில்லாதவர்கள்; கருவிகளையும் தம் வயின் கொண்டு வராதவர்கள்; போர் முகம் கண்டிராதவர்கள்; கற்கவும் எழுதவும் உள்ள சுவடிகளையும், தூவல் முதலிய எழுதுகோல்களையும் தாம் தூக்கி வரும் பழக்கத்தினரன்றிப் போர்ச் சூழ்ச்சிகளையும், கருவிகளையும் அறிந்திலாதவர்கள்.

(27-34) இவர்களைத் தடுத்து நிறுத்தும் காவலர் படையைக் கண்டும் இவர்கள் மலைப்புற்றாரிலர் முன்னேறி நடக்கும் நடையும் தளராதவர்கள்; இடையிடையில் தாம் ஒன்றிய போக்கில் நெகிழ்ச்சியும் முறிவும் இல்லாதவர்கள்! வெற்றிதான் அவர்களின் குறிக்கோள்! அவ் வெற்றி பெற வேண்டியதற்கான வீரவுணர்வே அவர்கள் தூக்கியிருக்கும் படைக்கருவி. உணவைத் தவிர்க்கின்ற நோன்பு உணர்வொடும், உயிர் கழலினும் ஊழ்க்காத முயற்சியொடும், பார்ப்பவர்களுக்குக் கண்களில் நீர் கசியும்படி, பகல், இரவு என்னும் பொழுதுகளையும் நல்லது, தீது என்னும் நிலைகளையும் நினையாதவர்களாகிக், குறிக்கோளில் பொருந்திய நெஞ்சத்தோடு மகிழ்வுடன் சென்றனர்.

(35-40) தொன்மைக் காலத்தினின்று வழி வழியாக வரும் அரசமரபினர் அல்லர் இவர்கள்; வலிமைமிகு சான்றோர் வழியாக வந்த துறவியரும் அல்லர் இவர்கள். பொருளிட்டமும், இன்ப நாட்டமும் அறம் பிழையாதவாறு நடக்கின்ற இருள்தவிர்ந்த வாழ்க்கையினையும் விரும்பாதவராகி, அன்றைய தமிழ்த்தாய்க்கு இன்று பிறந்த மக்களென, ஒன்றேயாகிய, தனித்த, நீண்ட நினைவொடு இவர்கள் சென்று கொண்டிருந்தனர்.

(41-47) மூவாததும், இளமை கொண்டதும், முதிர்ந்ததும் ஆகிய தமிழ் மொழிக்கு வந்து நேர்ந்து அழிவுறும்படி வருத்துகின்ற பெருந்துயரத்தைத் தகர்த்தெரிவதன் பொருட்டுத் தொடங்கியபோரில் தம்மை நெய்யூட்டிய எரிக்குள் புகுத்துக் கொண்டழிந்த புகழுடையோர் சிலர் உளர் உடலழிவுற்ற மேன்மையோர் சிலர் உளர். கடுமையான சிறைக்குள் அடைக்கப் பெற்ற துன்பத்தைத் தாங்கி கொண்ட வலிமையினார் சிலர் உளர். கொடுமையாகக் குறைக்கப் பெற்ற எச்ச உறுப்புகளுடன் துன்புற்று வருந்தியவர்கள் சிலர் உளர். எவ்வாறு உரைப்போம் அக் கொடுமை சான்ற அரசின் செயல்களை?

(48-57) பூப்போலும் கண்ணும், மதிபோலும் முகமும், புன்னகை செய்கின்ற சிவந்த வாயும் கொண்ட அவ் விளைஞர்கள் ‘செந்தமிழ் வாழ்க’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/259&oldid=1209138" இலிருந்து மீள்விக்கப்பட்டது