பக்கம்:நூறாசிரியம்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

279

61. கொள்கை முழக்கிய குரிசில்

இவளே,
பாரிய கூந்தல் புழுதி துவையத்
தலைதரை கிடத்தியும் எழுந்துமார் பெற்றியும்
செவ்விழி உகுநீர் நனைவாய் அரற்றியும்
எரியுண் மூங்கில் இணைகொடி யாகி
இனித்துணை யறியா இவனிள மனையே! 5
இவரே,
தந்தை கொள்கை தாமறி கல்லா
அன்னை அழுங்கல் ஆற்றுதல் அறியாது
எதிர்ந்த சூழலுக் கதிர்ந்த நெஞ்சொடு
விசித்தழா நின்ற இவன்மூ மகாரே! 10
இவனே,
வடவர் திணித்த வளரா மடமொழி
கடியத் துணிந்து காட்சியின் காட்ட
உடலந் தீக்கொள உயிர்தீந் தமிழ்க்கெனக்
கொள்கை முழக்கிய குரிசில் 15
விருகாம் பாக்கத்து அரங்க நாதனே!

பொழிப்புரை

(இவள் யார் என்குவீராயின்) இவளே, பரந்த கூந்தல் புழுதியில் தோயவும், தலையைத் தரையில் கிடத்தியும், பின் எழுந்து மார்பில் அடித்தும், சிவந்த விழிகளிலிருந்து உகுக்கின்ற கண்ணில் நனைகின்ற வாயால், அரற்றி அழுதும், எரியால் உண்ணப்படுகின்ற மூங்கிலைப் போல், நெய்யை ஊற்றிக் கொண்டு தீயால் பற்றியெறிந்து உண்ணப்படுகின்ற இவள் கணவன்மேல் இணைந்து பற்றியிருந்த கொடியாகி, இனிமேல் ஒரு துணையும் அறியாத இவனுடைய இளமை பொருந்திய மனைவி; இவனருகில் நிற்கின்ற) இவர்கள், தந்தையினது கொள்கை நெறியைத் தாங்கள் அறிய முடியாதவர்களாகத் தங்கள் அன்னையினது அழுகையையும், ஆற்றுகின்ற தன்மையும் அறியாமல், ஏற்பட்ட இச்சூழலுக்கு அதிர்ந்துபோன நெஞ்சுடன், விசித்தழுது நிற்கின்ற இவனுடைய மூன்று மக்கள் (இதோ, எரியால் உண்ணப்பட்டுப் பிணமாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/305&oldid=1209152" இலிருந்து மீள்விக்கப்பட்டது