பக்கம்:நூறாசிரியம்.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

283

(மானத்தும் மறந்தும் தாழ்ந்து அடிமைப்பட்டுக் கிடக்கும்) இன்றைய நாள் (தமிழுணர்வு திரிந்த) பெருமை குன்றிய மக்களது (இனவுணர்வற்ற) தன்மையை நீ அறிந்திருந்தும் எங்களை (இவர்களிடையில்) தமியராக விட்டு விட்டு, வேறு எவர் வந்து காப்பார்கள் என்று எண்ணங்கொண்டு நீ, நெய்யால் ஊட்டப் பெற்ற தீயினுள் புகுந்து உன்னுடைய உயிரைத் துறந்தனையோ?(அறியக் கூடவில்லையே!)

விரிப்பு:

இப் பாடல் புறத்துறையைச் சார்ந்தது.

இதுவும், முன்னைய பாடலில் பாடப்பெற்ற, தீப்புகுந்து ஆவி துறந்த விருகம்பாக்கத்து அரங்கநாதனைத் தம் மூன்று மக்களொடும் சூழ்ந்து நின்ற மனைவி அரற்றிப் பாடியது.

எம்மை - என்றது, அவள் தன்னையும் தன்னைச் சார்ந்த பெற்றோர் முதலியரையும் சுட்டியது.

தம்மை - என்றது தமிழின மக்களை.

கொம்மைப் பருவம் - அழகும், நலமும், வலிமையும் சான்ற இளமைப் பருவம்.

சின்னாள் கூடல் - குறைந்த காலமே கூடியிருந்த இளமை வாழ்வைச் சுட்டியது. குறைந்த கால இளமை வாழ்வில்.

நினக்கு யான் பயந்த நின்மகார்- நின்னால் கருப்பெற்ற யான் ஈன்றளித்த நின் மூன்று குழந்தைகள்.

முகில்படு முன்றில் - வானில் தோய்ந்த முகிலிடையில் தடவி நின்ற அரசமனை முன் கோபுரத்தில்

முக்கொடி நிறுத்தி -சேர, சோழ, பாண்டியரின் வில், புலி, கயல் ஆகிய மூன்று கொடிகளையும் நிறுத்தி.

அகல் நெடுங் கொற்றத்து - அகன்று நீண்டிருந்த ஆட்சி எல்லையில்.

அரசாண்டிருந்த- ஆட்சி செய்து கொண்டிருந்த,

ஒருமா முதுமொழித் திரு- உலகின் ஒருபெரும் முதுமை மொழியாகிய தமிழ் என்னும் செல்வி. -

திருவையும் காவார் -. அத்தமிழ் ஆகிய செல்வியையும் காவாத பற்றும் ஆக்கவுணர்வும் அற்றவர்.

வடவர் ஊன்றிய தமிழ்மாநன்னிலம் -வடநாட்டு ஆரியர் முதலியர் வந்து நிலைப்பட்டுவிட்ட தமிழ் நாடாகிய நல்ல நிலம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/309&oldid=1209159" இலிருந்து மீள்விக்கப்பட்டது