பக்கம்:நூறாசிரியம்.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

312

நூறாசிரியம்


69 சாய்தலும் இல்லேம்

சாய்தலு மில்லேம் சாயினும் நனைவிழி
ஒய்தலு மில்லேம்; ஒயினும் புழுங்குளம்
மாய்தலோ யாண்டையு மிலமே! தோய்துயர்
எவனுமைத் தொடருவ தென்குவீ ராயின்;
குடிபுரந் துவக்கும் கொற்றமு மில்லை;
முடிபணிந் துய்யுங் குடியுமீங் கில்லை;
நிறையின் வாங்கிக் குறையின் மாறும்
கறைநெஞ் சத்துக் கள்வரே வணிகர்;
அஞ்சுடர் தவறினும் அறந்தவ றாத
செஞ்சொல் மன்றுந் தந்திறங் குன்றிய,
கூத்துங் கலையுந் தீத்திறம் பட்ட,
பூத்துயர் கற்பின் மடவரும், புரைந்து
மனைமுடி கழற்றிப் புனைமுடி பூண்டார்!
வலியோர் வலிந்தார்; மெலியோர் மெலிந்தார்;
குலம்பல வாகிக் கலாம்பல விளைத்த;
தந்துயர் பொறைந்து பிறர்துயர் கரையும்
செந்நெறிச் சான்றோர்க் கேமமு மின்றே!
புல்லென் உவகைக் குள்ளம் விற்று
நல்லியல் பழிகுவர்; நாணுத் துறந்தார்;
பொருள்தனி யொன்றே போற்றும்
இருள்மிகு வாழ்வோர்க் கிரங்குகை யானே!


பொழிப்பு :

யாம் உடலைச் சாய்த்துப் படுத்தலும் இல்லேம் ; ஒரோவழிப் படுப்பினும் ஈரத்தோய்ந்த விழிகளை மூடித் துயிலுதலும் இல்லேம் : ஒரோவழித் துயிலினும் வெதும்புகின்ற எம்மனம் மறதி கொள்ளுதல் ஒரு போதும் இலேம்!

'இங்ஙனம் செறிந்த துயரம் நம்மைத் தொடருவது ஏன் ? 'என்று வினவுவீராயின், குடிமக்களைக் காத்து வாழ்வித்து உளம் மகிழும் நல்லரசும் நாட்டில் இல்லை; அரசுக்கு அடங்கி நடந்து குற்றங் குறைகளின் நீங்கி வாழும் குடிமக்களும் இல்லை. பிறரிடத்தினின்றும் தாம் மிகுதியாக வாங்கிக் கொண்டு பிறர்க்குக் குறைவாகக் கொடுக்கும் மாசுபட்ட மனத்தையுடைய கள்வர்களே வணிகர்களாக உள்ளனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/338&oldid=1221188" இலிருந்து மீள்விக்கப்பட்டது