பக்கம்:நூறாசிரியம்.pdf/344

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

318

நூறாசிரியம்


திரண்ட பெருஞ் செல்வமேனும் பயனின்றிப் பாழ்படக் கிடத்தலின் அச் சிறுமை தோன்றக் குன்றுசீர் என்றார். குன்று என்னுஞ் சொல் வெளிப்படையாய்க்பெயர்ப்பொருள் பயப்பினும் குறிப்பாய் வினைப்பொருள் தரும் நயங்கண்டு மகிழ்க

உயரிய நோக்கமின்றி உயிர் வாழும் பொருட்டே வயிறு நிரப்புதல் என்னும் இழிவு தோன்றத் தின்று என்றார்.

தின்று உயும் பொருட்டு - யாம் உணவு உண்டு உயிர்வாழும் பொருட்டு

உய்தலாவது பசியான் வருஞ் சாவினின்றுந் தப்புதல்.

தேய்கால் ஓயச் சென்று கேட்குநர் அல்லேம்யாமே - தேய்வுற்ற கால்கள் ஓயுமாறு தேடிச்சென்று பொருள் வேண்டுவேமல்லேம் யாம்

அலைச்சலாய்ப் பலரிடத்துஞ் செல்லுதலின் தேய்கால் என்றும் பலகாலுஞ் செல்லுதலின் ஓய என்றுங் கூறினார்.

கேட்டல் என்னுஞ் சொல் செவிமடுத்தல் என்னும் பொருளதே யாயினும் இக்காலத்து வேண்டுகோளைக் குறிப்பதாக அது பெரு வழக்குப் பெற்றுள்ளமையின் கேட்குநர் என்னுஞ் சொல்லில் வேண்டற் பொருளில் நின்றது.

அற்றை நாட் கவளம் அலைந்து உண்மாரை- அற்றைநாள் சிற்றுணவையும் பாடுபட்டுத் தேடி உண்ணுபவரிடத்து.

அற்றைநாட் கவளம் அலைந்துண்ணல் செல்வச் சேமிப்பற்ற அவர் தம் வறிய நிலையைக் குறித்தது. அன்றாடங்காய்ச்சி’ என்பது உலக வழக்கு.

கவளம் : சோற்றுத் திரளை - ஒருவாய்ச் சோறு என்னுமாறு அளவானும் சுவையானும் சிறுமைப் பொருள் பயந்து நின்றது.

அலைந்து - கடிதின் முயன்று தேடி

ஒன்றும் பெறுவேம் அல்லம் ஆயினும் - யாம் ஏதும் பெறுவேம் அல்லம் ஆயினும்

ஒன்றும் பெறுவேம் அல்லம் என்றமையான்' - யாம் பெறுமாறு அவர் ஏதும் உடையரல்லர் என்பதனைப் புலப்படுத்தினார். அன்றியும், அவர் வருந்தி பீட்டிய சிறுபொருளைத் தங்கட்டாயத் தேவைகளையும் மட்டுப் படுத்திக் கொண்டு எம்பால் வைத்த அன்பால் உவந்து வழங்கினும் அவர்தம் இன்னல்நிலை நோக்காது அதனைப் பெறும் வன்கண்மையுடையே மல்லேம் என்று கூறியதாகக் கொள்ளினும் அமையும்.

தெள்நீர் நனையடி ஏறி - தெளிந்த நீரின் கண்ணே நனைந்திருக்கும்