பக்கம்:நூறாசிரியம்.pdf/358

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

332

நூறாசிரியம்

கொறித்தல் -ஒவ்வொன்றாகக் கடித்துத் தின்னுதல், பொதுவாகக் கடித்தலைக் குறிக்கும் கறி என்னுஞ்சொல் ஒவ்வொன்றாகக் கடிக்கும் வேறுபாடு உணர்த்தற்குக் கொறி எனத் திரிந்தது.

தொடர் ஒலி படர்ந்த- தொடர்ந்த ஒலி பரவிய

புதுநெல் ஆதலின் பரபரப்போடு தொடர்ந்து கொறித்தது போலும்,

நெடுவல் இரவின்- வரவே நீண்ட வலிமை வாய்ந்த இரவின் செலவு போன்றது தலைமகனின் வருகை.

முன்னர்த் தலைவன் பிரிந்து சென்றிருந்த போது அவன் வரவை எதிர்நோக்கித்துயில் கொள்ளாது இரவிலும் விழித்திருந்த தலைவி அதனை நினைவுகூர்ந்து கூறினாள்.

இரவு நீண்டுசெல்லுதலும் வலிமையுடைத்தாதலும் இல்லையாயினும் தலைவனைப் பிரிந்து தனித்திருந்தமையின்

"ஒரு நாள் எழுநாள் போற் செல்லுங் சேட் சென்றார்

வருநாள்வைத் தேங்கு பவர்க்கு” என்றாங்கு இரவு நீண்டதாகவும் வலிமையுடையதாகவும் தோற்றியது எனக்கொள்க!

நோய்க்கு நல்வரவிற்கு ஒத்தது செலவே - அவன்றன் செலவு என்னைப் பற்றும் நோய்க்கு நல் வரவுகூறி வரவேற்பது போன்றது. நோயை வருக வருக என்று அழைப்பது போன்றதாம்; நோய் விரைந்து பற்றுதற்கு ஏதுவாம் என்றவாறு.

தலைவன் வரவுக்கு இரவின் செலவும் அவன்றன் செலவிற்கு நோயின் வரவும் உவமைகளாகச் சுட்டப்பட்டுள்ள முரணணி காண்க!

இப்பாடல் பாலை என்னும் அகத்திணையும் பிரிவுணர்த்திய தோழி க்குத் தலைவி வருந்திக் கூறியது என்னுந் துறையுமாம்.