பக்கம்:நூறாசிரியம்.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

356

நூறாசிரியம்


84 நல்லோர்க்கும் அஃதே

புரைமிகு வுரைவாய்ப் புளிங்கள் நாற
முறையறப் பழகும் முழுமாந் தர்க்கும்
இமையா நோக்கின் எல்லை காக்கும்
அமையாத் தோளின் பூட்கை யோர்க்கும்
ஈன்றோ ரிசைதர வூன்றியோர் மணந்து 5
தலைநாட் புல்லிய கழியிள வோர்க்கும்
கைவளை யுகுப்ப விழிநீர் கழல
மெய்கெடத் தணந்த மெல்லிய லார்க்கும்
நெடுநிலை முன்றின் நிலாப்பனி நனைப்ப
அடுகவர் ஒடுங்கும் அளியி னோர்க்கும் 10
இலையா கின்றே இரவே.
நல்லோர்க்கு மஃதே நயந்திசின் நாடே!

பொழிப்பு:

குற்றம் மிகுந்த சொற்களைப் பேசுகின்ற வாயினின்றும் புனித்த கள்ளின் நாற்றம் வெளிப்பட, யாவரிடத்தும் ஒழுங்கின்றிப் பழகும் முட்டாள்களுக்கும், கண்ணிமையாது நோக்குதலால் நாட்டின் எல்லையைக் காத்து நிற்கும் எழுச்சி கொண்ட தோளையுடைய கொள்கை மறவர்கட்கும்; பெற்றோர்தம் ஒப்புதலோடும் தம் உள்ளத்து வரித்தாரை மணந்து முதல்நாளில் கூடிய மிக்க இளமையுடையார்க்கும்; முன் கை வளையலை நெகிழவிடவும், விழி நீர் வெளிப்படுத்தவும் யாக்கை பொலிவிழப்பவும், தம் வாழ்க்கைத் துணைவரைப் பிரிந்த மெல்லிய இயல்பினரான மகளிர்க்கும்; உயர்ந்த கட்டடங்களின் தாழ்வாரத்தே நிலாக்காலத்துப் பணி நனைத்தலால் பொருந்திய சுவரோரத்தில் குளிரால் ஒடுங்கிக் கிடக்கும் இரங்கத் தக்கார்க்கும் இராப்பொழுது இல்லா தொழிகின்றது. நாட்டு நலம் நாடிப் பாடுபடும் சான்றோர்க்கும் அந்நிலையேயாம்.

விரிப்பு:

இப்பாடல் புறப்பொருள் சார்ந்தது.

மன்பதையெல்லாம் செயலொழிந்து துயில்கொள்ளும் இராப் பொழுதில் கண்ணுறக்கங் கொள்ளாதார் இன்னின்னார் எனக் கூறி நாட்டு நலம் விழையும் நல்லோரும் உறங்கார் என்று கூறுவது இப்பாட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/382&oldid=1209657" இலிருந்து மீள்விக்கப்பட்டது