பக்கம்:நூறாசிரியம்.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

405

தொடர்பாக அடுத்தடுத்து இரு கொடிய கனவுகளைக் கண்டனராக, சாவுக்கு அறிகுறியான அவ்விரு கனவுகளும் இருமாத அளவில் நனவாயின. அக்கையார் மறைந்தார்.

கனவுநிலை அறிகுறி காட்டிய உள்ளொளி தம்மை மெய்ப்பொருட் காட்சியில் கூட்டுவித்தல் உறுதியென்றும் அத்தகைய கனவு எதிர்க என்றும் வேண்டுவதாக அமைந்தது இப்பாட்டு.

இராசம்மாள் அம்மையார் சிறுமியாக இருந்தது முதல் அவர் தம் மறைவு வரையிலான வளர்ச்சியும் வாழ்வும் தம் இளவல் பால் கொண்ட கழிபேரன்பும்; பாவலரேறு கண்ட இரு தீக்கனா நிகழ்ச்சிகளும், அவை நனவான கொடுமையும், பிறவும் நாற்பத்து மூன்று அடிகளில் ஆற்றொழுக்காய் நடக்கும் இவ்வகவற் பாவினுள் பாலவரேறு அவர்களால் அருஞ்சித்திரமாகத் தீட்டப்பட்டுள்ளன.

மடவை நடுமுள் ஏய்ம்குறு பின்னல் - மடவை மீன் உடலில் நடுவிலிருக்கும் முள்போலும் பின்னலின்கண்,

சிறுமியின் பின்னலுக்கு மடவை மீனின் முள் உவமையாகக் கூறப்பட்டுள்ளது.

ஏய்-உவம உருபு.

அடர்த்திய பூவோடு... முறுவலும் கண்டேம் - செறிவுறப் பூவைச் சூடிக் கொண்டவளாய் ஆடிக் காட்டும் இளஞ்சிறுமியின் புன்முறுவலையுங் கண்டேம்;

பற்றாச்சிரையுனைவதும் கண்டேம் - அவளுடைய உடலுக்குப் பொருந்தாத சீலையை அணிந்து கொண்ட காட்சியையுங் கண்டேம்,

சீலை பெரியதாகலின் உடலுக்குப் பற்றாதாயிற்று.

பற்றா- பொருந்தாத, ைேரசலை.

மொய்விழி நடவிரல்....மடுத்தேம் - வண்டுபோலும் மொய்க்கின்ற விழிகளையுடைய அவள் நடனமாடும் விரல்களால் பூக்களைத் தலைமாறிச் சேர்த்து முற்றத்திலிருந்து தொடுத்த முல்லை மாலையைக் கண்ணாடிக்கு முன்னர் நின்று அணிந்து கொண்டு பாடிக்காட்டிய பாட்டையும் செவிமடுத்தேம்,

மொய்த்தல் என்னும் வினைபற்றி வண்டு வரவழைக்கப்பட்டது. பூத்தொடுக்கும் பெண்களின் விரல் நடனமாடுவதுபோற் காட்சியளித்தலின் நடவிரல் என்றார். பூக்களைத் தலைமாற்றிச் சேர்த்தலை உறழ்பெய்து என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/431&oldid=1211317" இலிருந்து மீள்விக்கப்பட்டது