பக்கம்:நூறாசிரியம்.pdf/439

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

413

100 துய்ப்போர் ஆகுநர்

உயிரின் மாட்டே உடலின் இயக்கம்;
உளமும் அறிவும் உயிரை இயக்குப;
உளமும் அறிவும் ஒன்றினை யொன்று
தாமே இயக்கித் தம்மொடு பொருந்திய
எல்லாப் பொருளையும் இயக்கலே வாழ்க்கை! 5
வல்லமை இருபான் குறையுங் காலை
எல்லாந் தூக்கிய இறையவன் இயக்கும்
இல்லவன் என்பது கல்லார் கூற்றே!
இன்னவன் என்பது பேதையர் கூற்றே!
மண்பொருட் கூட்டும் நுண்பொருள் இயக்கமும் 10
எண்பொரு ளாய்ந்த திண்ணியர் அறிவர்;
உயிர்ப்பொருள் யாவும் ஒன்றொடு தொடரும்;
மெய்ப்பொருள் அதனதன் மேலே தூங்கும்;
பொய்ப்பொருள் மெய்யின் போலிகை, அவையவை
உய்பொருள் அறிந்தவை உழைபோ வாரே 15
துய்ப்போர் ஆகுநர் துவ்வார்
நைவார் ஆகுநர் நலிபிறப் பானே!

பொழிப்பு:

உயிரின் பொருட்டாகவே உடலின் இயக்கம் நிகழுகின்றது; உயிரை உள்ளமும் அறிவும் இயக்குவனவாம்; அவ்வுள்ளமும் அறிவும் தமக்குள் ஒன்றனை யொன்று ஆளுமைபுரிந்து தம்மைச் சார்ந்த எல்லாப் பொருள்களையும் இயக்குதலே வாழ்க்கை யெனப்படுவதாம்.

உள்ளமும் அறவும் என்னும் இரண்டனிடத்தும், உயிரை இயக்குவதற்கான திறங்குன்றுமிடத்து அவ்வுயிர்களின் பொருட்டு யாவற்றையுஞ் தோற்றுவித்த இறையவன் அவற்றை இயக்குவான்.

இறைவனை இல்லாதவன் என்று மறுத்துரைப்பது மெய்ந்நூல்களைக் கற்றுணராதவர் கூறும் கூற்றாகும்; மற்று அவன் இருப்பை உடன்படினும் அவனை இன்னவன் என்று வண்ணித்துரைப்பது அறிவு விளங்கப் பெறாதவர் கூறும் கூற்றாகும்.