பக்கம்:நூறாசிரியம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
5பூரிப்பகங்கதிர்



ஊரே, பெடையடை உயிர்க்கப் புறம்போய்ப்
பூரிப் பசுங்கதிர் கொய்துவந் தூட்டும்
புறவினங் குணுகிறை மாடக் கூடலே;
உறவே கரவில் உளமொழு கியரே;
ஆயே, மைம்புகை கூர்ங்கண் அளைப்ப 5
ஒயா தட்டுறை கொம்பறு கொடியே!
நீயே, மாலுமென் நெஞ்சுட் புகுந்து
மேயுறு நினைவிற் காயவோ ருயிரே!
யானே, இளநகை கேட்டி
கூன்பிறை நுதலிற் சாந்தணி வோனே! 10


பொழிப்பு :

என் ஊராவது பெடைப்புறவு அடை கிடந்து உயிர்த்தல் செய்ய, சேவற் புறவு ஊர்க்குப் புறத்தே போய், புடைந்த பசுங்கதிர்களைக் கொய்து வந்து மகிழ்ந்து ஊட்டி, அதற்கு நலஞ் செய்யும் அன்பு நிறைந்த புறாக்கள் இனம் குனுகும் ஓசை நிரம்பிய இறைவன் கோயில் மாடம் மிகுந்த கூடல் நகரம். என் உறவாவது கரவு இல்லாத உளத்தான் ஒழுகியர் கூட்டம் என் ஆயோ, கருமை சூழ்ந்த புகை தம் கூர்த்த கண்களை அளைத்தல் செய்து வருத்தும்படி, ஒயாமல் அடுதல் அறையில் உறைந்து கிடக்கும் கொம்பு இழந்த கொடி போன்ற உடலினள். நீயோ, நின்பால் மயங்கிக் காதலுற்ற என் நெஞ்சின் உட்புகுந்து மேய்தலுறும் நினைவிற்குப் பற்றுக்கோடாகிய ஓர் உயிர். யானோ, இளநகை புரியும் நீ கேட்பாயாக, நின் பிறைபோலும் வளைந்த நெற்றியில் செஞ்சாந்து (குங்குமம்) அணிதற்கு உரியவனே!

விரிப்பு:

இப்பாடல் அகத்துறையைச் சார்ந்தது.

தலைவனும் தலைவியும் தம்முள் எதிர்ப்பட்டு ஒருவரை ஒருவர் விரும்பித் தேறிய பின்னர், தலைவி தலைவனின் ஊரும் உறவும் சுற்றமும் விரும்பிக் கேட்கத் தலைவன் விடையாக மொழிந்தது.

ஒருவரின் பண்பு, பழக்கம் முதலியவை சூழலால் அமைதல் உண்மையின், ஊர் கூறிய மட்டில் அவை அறியப்படுதல், இயலும் ஆகலின், முதற்கண் ஊரைக் கூறினான் என்க. ‘சான்றோர் பலர் யாம் வாழும் ஊரே’ என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/44&oldid=1251199" இலிருந்து மீள்விக்கப்பட்டது