பக்கம்:நூறாசிரியம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

நூறாசிரியம்

மெய்த் தன்மை புலப்படுத்த மனம் என்றனர். மெய்தனிப் பொருளன்று. உயிரொடும் பிற வொடும் கலந்த பல்பொருள் ஓருரு; பன்மூல வெளிப்பாடு. எனவே கோ ஏறும் கழுதை கோவேறு கழுதை எனப் பெயர் பெற்றாற் போல், உயிர் இருப்பதை மெய்ப்பிக்கும் உடலை மெய்யெனப் போற்றியும் தேற்றியும் கூறினர் என்க.

இனி மனம் நிலைப்பாடுற வளர்தலே அதன் மீமிசை நிலையாதலின் அது நிலை குலைதல் தாழ்வான மாந்த நிலையாம் எனக் கண்டு கொள்க. மனம் மக்களிடையன்றிப் பிறவுயிர்களிடத்தும் மங்கித் தோன்றுதல் உண்மையின், மக்கள்பால் புலரத் தோன்றிய நிலையினின்று வளர்ச்சியுறுதலே மாந்தத் தோற்றத்தின் சிறப்பாம் என்க. இவ்வழிச் சிறப்பெய்த வேண்டிய மனம் மண்போல் நிலை குலைதலுற்றது என்க. மண் உலகத் தோற்றத்தின் முதல்; நாற் பூதங்கள் நிரம்பிய ஐந்தாவது பூதப் பொருள். அத்தகையதோர் ஐம்பூதப் பொருளாகிய உடலில் மனம் என்னும் நிலைப்புப் பொருள் நிலைத்திருக்க வில்லையானால், இம் மண்ணிற்கும் உடலிற்கும் வேறுபாடுதான் என்னையோ என்று உன்னுக.

மாண்டொடு பொன்னாகின்றே பொய்யுடைப் போக்கே: பொய்யுடைப் போக்கு மாண்புடையதாகவும், பொன் போல் மதிக்கப் பெறுவதாகவும் உளது. பொய்-பொள் (வெறுமை-உள்ளீடற்றது) என்னும் வேரடியாகப் பிறந்த சொல். பொன்-பொலம் மிக்கது. பொல் என்னும் வேரடியாகப் பிறந்த சொல்லென்பதும், பயனும் முன்னரே குறிக்கப்பட்டன. மனம் நிலை குலைந்த பின் பொய் மாண்பென மதிக்கப் பெற்றது என்க.

வறிதாகின்றே அறிவே - மனம் நிலை குலைந்து, பொக்கு நிலை மதிக்கப் பெற்ற பின் அறிவு வறிதாக மதிக்கப் பெறுகின்றது என்க. வறிது- வறள். விளைவு இல்லது. வள்வறு வறுமை வறட்சி-வறண்டது. வள்-வெள்-வெறு-வெறுமை. அறிவின் விளைவு ஒன்றுமில்லை என்க. விளைவு-பயன். அறிவு நிலம் போல்வதாயின் அதனைப் பயன் கொளுவா வழி வறண்டு கிடத்தலால் வறிது நிலை எனப்பட்டது.

வானாட்குறி அதர் தப்பின்று குடும்பெனும் பயன் - குடும்பு நிலையால் எய்தப்பெறும் பயன் வாழ்நாளின் பெரு நோக்கினை அடையப் பெறுதல். அவ்வழி தவறிற் றென்க அதர்-வழி.

குடும்பு - கூடியுறைதல்நிலை, குடும்பு குடும்பம், குல்-குடு-கூடு : குல்-குலு-குலவு-குழு-குழும்பு. குல்-கல்-கல. கலாவுதல்-கலத்தல். உயிர்கள் கூடியுறைதலால் ஏற்படும் பெரும் பயன், வாழ்வின் வழி தப்பலால் இலதாகின்றது. அதர் தப்பவே பயனும் தப்பிற் றென்க.

முதியோர் முதுமை முகிழ்விறந்தன்று முதுமை-முற்றிய நிலை. முதுமை உடல் வழித் தெனினும், அறிவும், மனமும் அதன் வழி முதிர்வுற்று முகிழ்ச்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/94&oldid=1221501" இலிருந்து மீள்விக்கப்பட்டது