பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/133

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
131
 


அவன் எழுதப் போறான்னு கற்பனை பண்ணிக்கிட்டு வந்தியா? போய் வேற வேலையைப் பாரு”–என்று கோபாமாக இரைந்தார் கமலக்கண்ணன். கலைச்செழியன் அயர்ந்துவிடவில்லை. சிறிது நேரம் மெளனமாக எங்கோ பராக்குப் பார்ப்பதுபோல் பார்த்துவிட்டு, மெல்ல மறுபடி ஆரம்பித்தான்:

“சேத்துலே கல்லை விட்டெறிஞ்சா நம்ம முகத்திலே தான் தெறிக்கும் சார்! பதறப்பிடாது. இந்தத் தகவல் தெரிஞ்சதும் நான் நேரே நம்ம ‘தினக்குரல்’– ஆபீஸுக்குப் போயி பப்ளிஸிடி பிரகாசம் அண்ணன்கிட்டக் கலந்து பேசினேன். அவரு உங்க பேப்பரில் இருக்கறதுனாலே இந்தச் சேதியை உங்ககிட்டத் தானே வந்து சொல்லக் கூசினாரு அதுதான் நானே வந்தேன். இதிலே எனக் கொண்னுமில்லே.. .பார்க்கப்போனா இந்த மாதிரி விசயத்திலே உங்களுக்கு இல்லாத அக்கறை எனக்கு வேண்டியதில்லே... ஆனா உங்ககிட்டப் பழகிட்ட தோஷம்... மனசு கேக்கல்லே...”

–கலைச்செழியனின் இந்த அநுதாபம் தேர்ய்ந்த வார்த்தைகள் கமலக்கண்ணனைச் சிறிதளவு மனம் இளகச் செய்திருக்க வேண்டும். அவர் கடுமையாகப் பதில் கூறுவதை விடுத்துச் சற்றே சிந்தனையிலாழ்ந்தாற் போலிருந்தார். அவர் நிலையை நன்கு புரிந்துகொண்ட கலைச் செழியன் மீண்டும் தொடர்ந்தான்:

“என்ன காரணமோ தெரியலிங்க.. ஐயாகிட்ட முதமுதலாப்பழகினதிலிருந்து எனக்கு மனசு ஒட்டுதலாயிடிச்சு. ஐயா பேருக்கு ஒரு களங்கம் வர்ரதை என்னாலே சகிச்சுக்க முடியலிங்க அதுவும் இப்ப இருக்கிற ஒரு நெலையிலே இப்படி அவதுாறே வரக்கூடாதுங்க...களையெடுக்கற மாதிரி முதல்லேயே இதுகளைத் தீர்த்துக் கட்டிப்புடனும்...”

“இப்ப என்னதான் செய்யனுங்கிறே நீ?”

“ஏதாவது கொடுத்து ஒழியுங்க... இவனுகளுக்கு இது ஒரு பிழைப்பு..."