பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/142

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

நெஞ்சக்கனல்


ஐ.சி.எஸ். அதிகாரி வந்து காத்திருப்பதைக் கூறினார் காரியதரிசி. அவரை வரச் சொல்லுமாறு கூறிவிட்டுக் கமலக்கண்ணன் அவசர அவசரமாக முகத்தைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டு ஐ.சி.எஸ். அதிகாரியை வரவேற்பதற்குத் தயாரானார். மனநிலை வேறு தெளிவாக இல்லை. ‘உண்மை ஊழியனின்’ பயமுறுத்தல், அதை வைத்துக் கலைச்செழியன் தன்னை பிளாக் மெயில் செய்து பணம் பறித்தது, எல்லாம் சேர்ந்து மனத்தைக் குழப்பியிருந்தன.

அதிகாரியிடம் முறையைக் கழிப்பது போல் ஒரு மன்னிப்புக்கேட்டு விட்டு வரவேற்றுப் பேசினார். அதிகாரியும் தம்முடைய மன எரிச்சலைக் காட்டிக் கொள்ளாமல், .ஏதோ பேச வேண்டியதைப் பேசிவிட்டுப் போய்ச் சேர்ந்தார்.

சிறிதுநேரத்திற்கு யாரையும் உள்ளே அனுப்பவேண்டாமென்று காரியதரிசியிடம் கூறிவிட்டு மீண்டும் சிந்தனையிலாழ்ந்தார் கமலக்கண்ணன். மந்திரியாக வந்ததிலிருந்து தமது தொழில் நிறுவனங்களின் நிலை என்ன என்பதை அன்றன்று அறிய முடியாமலிருப்பதை எண்ணியும் அவர் கவலைப்பட்டார். தம்முடைய அன்றாட வாழ்க்கையின் உல்லாசங்கள் பலவற்றை இந்தப் பதவி காரணமாகத்தாம் இழக்க நேர்ந்திருப்பதையும் அவர் சிந்தித்தார். நண்பர்கள் சந்திப்பு, கிளப்பில் சீட்டாட்டம், ரோடரி மீட்டிங், டென்னிஸ் விளையாட்டு, வீக் எண்ட் பயணம், எல்லாம் போயிருப்பதையும் உணர முடிந்தது. ஆனாலும் தங்களுக்காகத் தாங்களே நியமித்துக்கொண்ட தெய்வங்களை வழி படுவது போல் மக்கள் மந்திரிகளை வழிபடுவதினால் கிடைக்கிற பதவியின் சுகம் நின்னவு வந்து ஆறுதலளித்தது. ஜனநாயகத்தில் வாக்களிக்கின்றவன் சுதந்திரத்தை ஒரே ஒரு நாளிலும், வாக்களிக்கப்பட்டவன் பதவிக்காலம் முடிகிற வரை பல நாட்களும் அடைய முடியும் என்பது ஞாபகம் வந்தது. அந்த நினைவு இதமாக இருந்தது.

டெலிபோன் மணி அடித்தது. கமலக்கண்ணன் தமது சிந்தனை கலைந்து டெலிபோனை எடுத்தார். முதலமைச்சர் அவருடைய அறையிலிருந்து டெலிபோனில் பேசினார்.