பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/165

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

163


கிறவனும் பழைய ஜஸ்டிஸ் ஆள்–’ என்று தான் பாமர நிலையில் பேசுவான். சிபாரிசு நீங்கள் செய்ததால் தான் இது கிடைத்தது என்பது எப்படியோ எம்.என்.சி.சி. ஊழியர்கள் அனைவருக்கும் பார்ட்டி ஆபீஸுக்கும் நன்றாகத் தெரிந்திருக்கிறதே?”–என்று குறைபட்டுக் கொண்டார் முதன் மந்திரி. அந்த நிலையில் கமலக்கண்ணனால் அவருக்குத் திருப்தியளிக்கிற ஒரு பதிலும் கூற முடியவில்லை.

14

முதலமைச்சருக்கும் கமலக்கண்ணனுக்கும் இடையே நீண்ட நேர அமைதி நிலவியது. அவருக்கும் இவரிடம் கேட்க எதுவுமில்லை. இவருக்கும் அவரிடம் தெளிவு செய்ய எதுவுமில்லை என்பது போல அந்த மெளனம் விட்டுத் தெரிந்தது. பஸ்–ரூட் தொடர்பாகக் கமலக்கண்ணன் தலையிட்டுச் செய்த காரியத்தை முதன் மந்திரி அறவே விரும்பவில்லை என்பதை–அந்த அழுத்தமான மெளனம் காட்டியது:

“சரி! அப்புறம் பார்க்கலாம்...”–என்று மெளனத்தின் நீண்ட இடைவெளிக்குப்பின் மெல்ல வாய் திறந்தார் முதலமைச்சர். அதற்குமேல் அவரை நோக்கிப் ‘போய் வருகிறேன்’–என்ற குறிப்பில் தலையசைத்துவிட்டு எழுந்து வெளியே வருவதைத் தவிரக் கமலக்கண்ணன் செய்ய எதுவும் மீதமில்லை. அதையே அவரும் செய்தார். கோடிசுவரராகிய அவர்–தேசபக்தியையும், தியாகத்தையும் தவிர நாளைக்குச் சாப்பிடுவதற்கென்று ஒரு பைசாவைக்கூடச் சேர்த்துக்கொள்ளாத அந்த ஏழை முதலமைச்சரிடமிருந்து வெளியேறி வரும்போது–குணங்களால் ஏழையாகிவிட்ட தாழ்வு மனப்பான்மையோடு தள்ளாடி நடந்துவர நேரிட்டது. தான் தள்ளாடி நடக்கவும், அவர் நிமிர்ந்து உட்காரவும் காரணமானது எதுவென்று ஒருகணம் உள்ளே