பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/169

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

167


பண்ணிக்காதிங்க...இதைக் கைவிடறதாகச் சாயங்காலப் பேப்பர்லே நீங்களே அறிவிக்கலேன்னா நானே இன்த மறுத்து அறிக்கைவிட வேண்டியிருக்கும்...”

“.....................”

“என்ன பதில் பேச மாட்டேங்கிறீங்க? உடனே நிறுத்தறேன்னு சொல்லுங்க...”

“அப்படியே செய்யறேன் சார்.கோபப்படாதீங்க...”–என்று பயந்த குரலில் பதில் கூறினார் கமலக்கண்ணன். எதிர்ப்புறம் முதலமைச்சரின் டெலிபோன் செவியை உடைப்பது போல் கோபமாக வைக்கப்படும் ஓசை கமலக்கண்ணனுக்கு கேட்டது. டெலிபோனை வைத்துவிட்டுத் தள்ளாடியவாறு சோபாவில் சாய்ந்தார் அவர். வியாபார ரீதியாகக் கணக்கிட முடியாத நல்ல மனிதர்கள் உலகில் நிறைய இருப்பதாக ஒரு பயம் அவருக்குள்ளேயே கிளர்ந்து சுமையாகிக் கணக்கலாயிற்று. ‘முதலமைச்சரின் வேண்டு கோளுக்கிணங்கிச் சிலை ஏற்பாட்டைக் கைவிடுவதாக’ – அவரே அறிக்கை எழுதியனுப்ப வேண்டிய நிலையிலிருந்தார். புகழையும், பணத்தையும் துச்சமாக மதிக்கிறவர்களை எதிரே பார்க்கும் போதெல்லாம் அந்த நெஞ்சங்களின் கனலில் அவர் பயந்து வெதும்பினார். காரணம் அவரால் புகழையும், பணத்தையும் துச்சமாக மதிக்க முடியவில்லை. அப்படி மதிப்பதற்குரிய நெஞ்சமோ, கனலோ அவரிடமில்லை.

சிந்தித்தபடியே வராந்தாப் பக்கம் நடந்தவர்–எதிர்ப்புறம் தெருச்சுவரில் ஏதோ போஸ்டர் பளீரென்று தெரியவே– தோட்டத்துச் சுவரருகே சென்று நின்று படிக்க முயன்றார். எழுத்துக்கள் அங்கிருந்து சரியாகத் தெரியவில்லை. தோட்ட்க்காரனைக் கூப்பிட்டு அது என்ன சுவரொட்டி என்று படித்தறிந்து வருமாறு பணித்தார். அந்தச் சுவரொட்டியைப் பற்றி அவர் மனத்தில் ஏதோ சந்தேகம் தட்டியது. தோட்டக்காரனை அனுப்பவும் முதலில் அவர் மனம் கூசினாலும் தானே நேரில் தெருவில் போய்நின்று அதைப் படித்துப் பார்க்கத் துணிய முடியாமலிருந்தது.