பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/173

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
171
 


விண்ணப்பதாரர்கள் ஓர் பெரிய அரசியல் குழப்பமாக இதை மாற்றிவிட்டு–அத்தனை குழப்பத்திற்கும். கமலக்கண்ணனே காரணமென்றும் கிளறி விட்டு விட்டார்கள். எங்கும் இதே பேச்சாகிவிட்டது. பெரிய குற்றம் எதையும் மன்மறிந்து செய்யாமலே இருந்தாற் போலிருந்து அவர் அருவருக்கத் தக்கவராகி விட்டார். சில பெரிய பத்திரிகைகள் ‘பஸ் ஊழல்’– செய்திகள் என்றே ஒரு பத்தி தொடர்ந்து வெளியிடத் தொடங்கிவிட்டன். ஒரு மஞ்சள் பத்திரிகை ‘மாயாதேவிக்கு அவர் நெக்லஸ் பரிசளித்துக் கொண்டிருக்கும் படத்தை’ எப்படியோ–எங்கிருந்தோ வாங்கிப் பிரசுரித்து ‘நிதி மந்திரியா–சினிமா லோலரா?’–என்று கீழே ஒரு வாக்கியமும் அச்சிட்டிருந்தது. அந்தப் படம் வெளிவந்த தினத்திலிருந்து கலைச்செழியன் அவர் முன் தென்படுவதில்லை. ‘ஆள் எங்கே?’–என்பதும் தெரியாது போயிற்று. சரியான தொகைக்கு, அவனிடம் அந்தப் படத்தை யாரேனும் விலைக்கு வாங்கியிருக்க வேண்டு மென்று கமலக்கண்ணனால் அநுமானிக்க முடிந்தது. படத்தை வெளியிட்ட பத்திரிகையின்மேல் வழக்குப்போடவும் வழியில்லாமல் இருந்தது. அந்தப் பதினைந்து நாள் சூறாவளியில் முதன் மந்திரியோ, சகமந்திரிகளோ, கட்சித் தலைவர்களோ, கமலக்கண்ணனைப் பார்க்கவும் வரவில்லை, ஃபோனிலும் பேசவில்லை. புறக்கணித்த மாதிரி நடந்துகொண்டார்கள்.

ஒருநாள் அவர் மனைவி தானாகவே அவரிடம்இதைப் பற்றிய பேச்சைத் தொடங்கினாள்:–

“இதுக்காகப்போட்டு ஏன் இப்படி மனசை அலட்டிக்கிறீங்க...? பொதுக்காரியம்னா நாலுவிதமும்தான் இருக்கும். நமக்கு இருக்கிறது நாலு தலைமுறைக்குக் காணும். பஸ்ரூட் வாங்கிக்கொடுத்துப் பணம் சம்பாதிக்கணும்னு நம்ம தலையிலே எழுதலே. சனியனை விட்டுத் தலையை முழுகுங்க...ஏதோ கிரக பலன் சரியில்லே...அந்த சோசியரு சர்மா–வந்தால் கேக்கணும்!...அவரையும் கொஞ்ச நாளாக் காணலை...”