பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/174

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
172
நெஞ்சக்கனல்
 


“அவருக்கு போன் இருக்கு...கூப்பிட்டு வரச்சொல்லேன்..கேட்போம்” என்றார் கமலக்கண்ணன். அவருடைய மனைவி உடனே ஜோசியருக்கு ஃபோன் செய்து விட்டுக் கமலக்கண்ணனின் அருகே வந்தாள்... “என்னாங்க? ஜோசியரு என்னமோ வாய் புளிச்சுதோ மாங்கா புளிச்சுதோன்னு பேசறாரு...?”

“வர்ராரா? இல்லையா? என்ன சொன்னாரு...? சொல்லு...”

“வர்ரேன்னாரு...ஆனாகுரல்தான் உற்சாகமாஇல்லே!”

“எப்படி இருக்கும்? அவரும் எல்லாம் கேள்விப்பட்டிருப்பாரில்ல?”

“உங்க நண்பர்– அதான்...அந்த டிரான்ஸ்போர்ட் மினிஸ்டரு, தன் பேரில் அபவாதம் வராமத் தப்பணுங்கிறதுக்காக–நீங்கதான் டில்லிலேருந்து போன் பண்ணி இது விஷயமா அவரை வற்புறுத்தினிங்கன்னு’ எல்லாரிட்டவும் சொல்லியிருப்பாரு போலருக்கு...”

“சொன்னா என்ன தப்பு அதிலே? உள்ளதைத் தானே சொல்லியிருப்பாரு...நான் போன். பண்ணியிருக்கக் கூடாதுதானே?” என்று கமலக்கண்ணனும் விரக்தியோடு தன்னை வெறுத்தாற் போலவே கூறினார். அந்த விஷயமாக மனைவி தன்னுடன் பேசுவதுகூட அப்போது அவருக்குப் பிடிக்கவில்லை. அதை விட்டுவிட்டு வேறு எதையாவது பேசினால் நல்லதுபோலத் தோன்றியது. மனைவி...பங்களாவின் முன்புறம் போய் ஜோதிடர் சர்மாவை அழைத்து. வரக் கார் அனுப்பினாள். அரைமணி நேரத்தில் ஜோதிடர் சர்மா வந்தார். ஜாதகத்தைக் கொண்டுவந்து அவரிடம் வைத்தார் கமலக்கண்ணன். .

“ராகு கொஞ்சம் கஷ்டப்படுத்தறான். ஒரு மண்டலத்துக்குக் கொஞ்சம் போறாது. திங்கள் கிழமை திங்கள் கிழமை...ஏதாவது முருகன் சந்நிதியிலே உங்க நட்சத்திரத்துக்கு அர்ச்சனை பண்ணுங்கோ. எல்லாம் சரியாப் போயிடும்” என்றார் சர்மா.