பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/179

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
177
 


வந்தோமோ அந்த ஏணியையே வந்த வேகத்தில் உதைத்துத் தள்ளுவது அவளுக்குப் பிடிக்கவில்லை.

முதன் மந்திரியை அவருடைய விட்டில் போய்ச் சந்திப்பதற்கு முன்பே கமலக்கண்ணன் மனக்குழப்பமும் வேதனையும் அடைந்திருந்தார். எதைச் செய்வது எதைப் பேசுவது என்ற மனக் குழப்பங்களிலிருந்து விடுபட முடியாமல் தவித்தார். தம் வீட்டு வாசலில் உண்ணாவிரதம் இருக்கும் கட்சி ஊழியரைக் கண்டிக்கவோ அகற்வோ செய்யாமல், போலீஸ் பாதுகாப்பும் வசதிகளும் செய்து கொடுத்திருப்பதை வேறு அவர் கண்டிருந்தார். தேர்தலில் வென்றதும் தம்மை மந்திரியாக்குவதற்காக உதவி செய்து தம் செலவில் கார் வாங்கிக்கொண்ட பிரமுகரொருவரின் உதவியை நாடி அவரையும் அழைத்துக்கொண்டு முதன் மந்திரியைக் காணச் செல்வதென்று முடிவு செய்தார் அவர்.

ஃபோன் செய்து அந்தப் பிரமுகரோடு பேசுவதற்கு முயன்றார். ஃபோனில் இவர் எதிர்பார்த்தது போல் அவர் பிடிகொடுத்துப் பேசவில்லை.

“ஏதோ கேள்விப்பட்டேனுங்க...சரியா விவரம் ஒண்ணும் எனக்குத் தெரியாது...நீங்க இப்படிப் போயிருக்க வேண்டாம்னு தோணிச்சு வெறும் வாயையே மெல்றவங்களுக்கு அவல் கிடைச்சா விடுவாங்களா;....எல்லாம் காலக் கோளாறுங்க..’–என்று பட்டும், படாமலும் கமலக்கண்ணலுக்கு ஆறுதல் கூறினாரே ஒழிய–எந்த வழியையுமே அவர் சொல்லவில்லை.

“சீஃப் மினிஸ்ட்ரு எம்மேல ரொம்புக் கோபமாயிருக்காருன்னு தெரியுது. நீங்க வந்து சொன்னிங்கன்னாத் தேவலை”–என்று கமலக்கண்ணன் தம் கருத்தை அவரிடம் வெளிப்படையாகவே வெளியிட்டார்.

“சிலை வைக்கிறேன்னு கிளம்பி ஏற்கெனவே இருந்த கோபத்தை நீங்களே ரெண்டு மடங்காக்கிட்டீங்க. இப்ப நான்கூட வந்தேனோ என் மேலேயும் எரிஞ்சுதான் விழுவாரு .நீங்க இப்பிடியெல்லாம் பண்ணியிருக்கவாணாம்...”