உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

29

கவேண்டும்என்பதைவிடமுக்கியமாக அப்படிப்பளீரென்ற கார் ஒன்றில் தாம் தனியே அமர்ந்து கம்பீரமாகச் சவாரி செய்வதை அவர்கள் எல்லாரும் பார்க்கும்படியாகச்செய்து விடவேண்டும் என்பதே அவருடைய நோக்கமாயிருந்தது.

சிலரிடம், “கமலக்கண்ணன் ஒரு முக்கியக் காரியமாக வண்டி அனுப்பிக் கூப்பிட்டார். போய்விட்டு வருகிறேன்...” என்றும், இன்னும் சிலரிடம், “ஒரு காரியமாகப் போகிறேன். அப்புறம் பார்க்கலாமே” என்றும் கூறினார் வெண்ணெய்க்கண்ணனார்.

கார் டிரைவர் தனக்குள் சிரித்துக்கொண்டான். ஏறுவதற்கோ இறங்குவதற்கோ கார்க் கதவைத் திறப்பதற்குக் கூடத் தெரியாத இந்தத் தமிழ்ப் பண்டிதர் செய்கிற ஜபர்தஸ்தைப் பார்த்து அவனுக்குச் சிரிப்புப் பொங்கிக் கொண்டு வந்தது. அவரைக் கொண்டுபோய் இறக்க வேண்டிய இடம் புரசைவாக்கத்தில் ஒரு சிறிய சந்து, சந்தின் முனையை நெருங்கியபோதுதான் அது ‘நோஎண்ட்ரி” என்று தெரிந்தது. சந்தின் மறுமுனை ‘எண்ட்ரி’ ஆக இருக்க வேண்டும். ஆனால் அதற்குப் போவதற்கு ஊர் சுற்ற வேண்டும். இந்த நிலைமையில், “ஐயாவுக்கு இந்தச் சந்திலே எத்தினியாவது வீடு?” என்று காரை நிறுத்திக் கொண்டு மெதுவாகக் கேட்டான் டிரைவர்.

“இந்தச் சந்திலே கீழ வரிசையிலே ஐந்தாவது வீடு வாசலிலேயே பெயர்ப்பலகை மாட்டியிருக்கும் ‘தொல் காப்பியர் இல்லம்’னு” என்றார் வெண்ணெய்கண்ணனார். தான் சொல்கிற குறிப்பை நாசூக்காகப் புரிந்து கொள்ளத் தெரியாத அந்தப் புலவர் மேல் கோபம் கோபமாக வந்தது டிரைவருக்கு. புத்திக் கூர்மையும் சந்தர்ப்ப ஞானமும் உள்ள பாமரனுக்கு அவை சிறிதுமில்லாத மரத்துப்போன அறிவாளியின் மேல் உண்டாகிற ஆத்திரம் அது சமயோசிதமில்லாத மேதையின் மேல் சமயோசிதமும் குறிப்புணரும் திறனுமுள்ள சாதாரண மனிதனுக்குச் சில சந்தர்ப்பங்களில் தவிர்க்க முடியாமலும் தடுக்கமுடியாமலும் ஏற்படுகிற ஆத்திரத்தின் வகையைச்சேர்ந்தது அது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/31&oldid=1036074" இலிருந்து மீள்விக்கப்பட்டது